தத்தளித்துக்கொண்டிருக்கும் தாய்லாந்து சுற்றுப்பயணத்துறைக்கு இந்திய சுற்றுப்பயணிகள் கைகொடுத்து வருகின்றனர். புக்கெட் தீவுக்குச் செல்லும் சீனப் பயணிகளின் எண்ணிக்கை மந்தமடையும் வேளையில் இந்தியாவிலிருந்து வரும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.
"இப்போது புதிய வளர்ச்சி ஒன்றை நாங்கள் காண்கிறோம். சீனர்கள் முன்பு செய்ததுபோல் இந்தியர்கள் பயணத்துறையின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்கின்றர்," என்று 'உ விஜிட்' கேளிக்கை விடுதியின் பொது நிர்வாகி கோங்சக் கூபொங்சகோர்ன் தெரிவித்தார்.
முன்னதாக, சீனாவிலிருந்து வரும் சுற்றுப்பயணிகளின் வருகையால் தாய்லாந்தின் சுற்றுப்பயணத்துறை ஆண்டுக்கு 10 விழுக்காடு வளர்ச்சியடைந்து வந்தது. ஆனால் புக்கெட்டில் 2018ஆம் ஆண்டில் நிகழ்ந்த விபத்தில் சீனர்கள் பலர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்நாட்டிலிருந்து வருகைகள் வெகுவாகக் குறைந்தன. அத்துடன், சீனப் பொருளியல் முதிர்ச்சி பெறுவதால் அதன் வளர்ச்சி விகிதமும் குறைந்து வருகிறது.
இதற்கு எதிர்மறையாக இந்தியாவின் பொருளியல் வளர்ச்சியால் அதிக வருமானம் சம்பாதிப்போரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அத்துடன், தாய்லாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விமானப் பயணங்கள் அதிகரித்துள்ளன. தற்போது தாய்லாந்தின் வெளிநாட்டு வருகையாளர்களில் 28 விழுக்காட்டினர் சீனர்களாகவும் 4 விழுக்காட்டினர் இந்தியர்களாகவும் உள்ளனர். ஆயினும், பத்து ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து வரும் வருகையாளர்களின் எண்ணிக்கை 15 விழுக்காடு வரை அதிகரிக்கும்.

