வெளியேறியவர்களை 'அமைச்சர் பதவி' கொடுத்து சுண்டியிழுக்க முயற்சி

வெளியேறியவர்களை 'அமைச்சர் பதவி' கொடுத்து சுண்டியிழுக்க முயற்சி

2 mins read
06df8141-9156-432f-89be-d6409755ed36
கர்நாடக முதல்வர் குமாரசாமி. (கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்) -

கர்நாடகாவில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளக் கூட்டணியின் கைகளிலிருந்து மாநில ஆட்சி கைநழுவிப்போகும் வேளையில் கூட்டணியிலிருந்து விலகிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்து தனது ஆட்சியைக் காப்பாற்ற அந்தக் கூட்டணி முயன்று வருகிறது. இதற்காகவே, மாநில அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகியுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 11 சட்டமன்ற உறுப்பினர்களும் ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் அண்மையில் பதவி விலகுவதாக கர்நாடக சட்டமன்றத்தின் தலைவரிடம் தெரிவித்தனர். இவர்களது இந்தச் செயலுக்கு பாரதிய ஜனதா கட்சி காரணம் என்று மாநில ஆளுங்கூட்டணி குற்றம் சாட்டுகிறது.

என்ன செய்வதென்று முதல்வர் குமாரசாமியின் நிர்வாகம் திணறிக் கொண்டிருக்கையில், நேற்று சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் எச்.நாகேஷ் தாமும் பதவி விலகுவதாகத் தெரிவித்தார். பதவி விலகல் கடிதத்தையும் அவர் மாநில ஆளுநரிடம் கொடுத்தார். மேலும் ஒரு சுயேச்சை உறுப்பினர் அவ்வாறு செய்தார்.

விலகியவர்களை எப்படியாவது திரும்ப தன்பக்கம் இழுக்கும் முயற்சியில் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த குமாரசாமியின் தலைமையிலான அரசாங்கம், அவர்களுக்கு அமைச்சர் பதவியைக் கொடுக்கப்போவதாக அறிவித்தது. அமைச்சர் பதவியில் அப்போது இருந்த 21 காங்கிரஸ் அமைச்சர்களும் ஜனதா தளத்தைச் சேர்ந்த ஒன்பது அமைச்சர்களும் தங்களது பதவியிலிருந்து விலகிக் கொண்டனர்.

பதவி விலகியோரின் கடிதங்களை இன்று (ஜூலை 9) பரிசீலிக்கப்போவதாக கர்நாடக மாநில அவைத்தலைவர் ரமேஷ்குமார் முன்னர் அறிவித்திருக்கிறார். அந்தக் கடிதங்களை அவர் ஏற்றுக்கொண்டால் ஆளுங்கூட்டணியின் சட்டமன்ற இடங்கள் 103ஆகக் குறைந்துவிடும். சுயேச்சை வேட்பாளர்களால் பாஜகவின் இடங்கள் 107ஆக உயரலாம் என்று இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

குறிப்புச் சொற்கள்