கர்நாடகா : சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்திக்கவிடாமல் தடுக்கப்பட்ட காங்கிரஸ் அமைச்சர்

கர்நாடகா : சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்திக்கவிடாமல் தடுக்கப்பட்ட காங்கிரஸ் அமைச்சர்

2 mins read
21c356f5-587e-45da-b90c-d351bce387f3
கூகல் வரைப்படம். -

கர்நாடக மாநில அரசின் ஆளுங்கூட்டணியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி விலகலைத் தொடர்ந்து அதன் ஆட்சி கவிழாமல் இருக்க காங்கிரஸ் அமைச்சர் டி.கே சிவகுமார், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் சட்டமன்ற உறுப்பினர் சிவலிங்கே கவுடா உள்ளிட்ட நால்வர் இன்று மும்பை சென்றனர்.

கூட்டணிக்கு எதிராகச் செயல்படும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கியுள்ள ஹோட்டலுக்குள் நுழைய முயன்ற திரு சிவகுமார் போலிசாரால் தடுக்கப்பட்டார். திரு சிவகுமாரிடமிருந்து தங்களைப் பாதுகாக்குமாறு கோரி ஹோட்டலிலுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் போலிசாருக்குக் கடிதம் அனுப்பியுள்ளதால் திரு சிவகுமாரை உள்ளே அனுமதிக்க முடியாது என்று மும்பை போலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இதனால் கடும் அதிருப்தியடைந்த திரு சிவகுமார், "நான் போகமாட்டேன், நாள் முழுவதும் இங்கேயே காத்திருக்கப்போகிறேன்," என்று கோபத்துடன் பாதுகாப்புப் போலிசாரிடம் கத்திப் பேசியதாக இந்திய ஊடகங்களில் பதிவாகியுள்ளது.

"என் நண்பர்களைச் சந்திக்க அனுமதியுங்கள். அவர்களுடன் ஓய்வாக அமர்ந்து காப்பி சாப்பிடவேண்டும்," என்று பின்னர் அவர் பாசமாகக் கூறியபோதும் போலிசார் அதற்கும் பணியவில்லை.

ஹோட்டலிலுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியிடமிருந்து தங்களைப் பாதுகாக்குமாறு போலிசாரிடம் கேட்டிருந்தனர். அவரும் திரு சிவகுமாரும் வல்லந்தமாக ஹோட்டலுக்குள் நுழையக் கூடியவர்கள் என்பதால் போலிஸ் பாதுகாப்பு கடுமையாக இருக்கவேண்டும் என்றும் அந்த எம்எல்ஏக்கள் கோரியிருந்தனர்.

இதனால் அவர்கள் தங்கியிருக்கும் 'ஹெனிசான்ஸ்' ஹோட்டலைச் சுற்றி நூற்றுக்கும் அதிகமான மும்பை போலிஸ்காரர்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். நடக்கும் குழப்பம் அனைத்தும் பாஜகவின் சதி என்று திரு சிவகுமார் குற்றம் சாட்டியிருக்கிறார்.