வர்த்தக வரிகள் குறித்து இந்தியா, அமெரிக்கா பேச்சு

வர்த்தக வரிகள் குறித்து இந்தியா, அமெரிக்கா பேச்சு

1 mins read
e2e92a5e-308c-4735-ad20-584293cb1d57
ஜி20 மாநாட்டில் டிரம்ப், மோடி. (படம்: ராய்ட்டர்ஸ்) -

இந்தியாவும் அமெரிக்காவும் வர்த்தக வரிகளையும் தன்னைப்பேணித்தனத்தையும் பற்றி இன்று பேசவுள்ளன. அமெரிக்க ஏற்றுமதிகள் மீது இந்தியா விதிக்கும் உயர் வரிகள் ஏற்கத்தகாதவை என்று திரு டிரம்ப் இவ்வாரம் டுவிட்டரில் மீண்டும் கூறியுள்ளார்.

திரு மோடி சொந்த மக்களைக் காட்டிலும் வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு முக்கியத்துவம் தருபவர் என்ற கருத்துக்கு முரணான விதத்தில் அவரது நிர்வாகத்தின் அனைத்துலக வர்த்தகக் கொள்கைகள் அமைந்துள்ளன. உள்நாட்டு உற்பத்தித்துறையைப் பாதுகாக்க நினைக்கும் இந்தியா, இன்னும் மலிவான விலையில் விற்கப்படும் அமெரிக்க ஏற்றுமதிகள் மீது இந்த வரிகளை விதிக்கிறது. கடந்த மே மாதம் நடந்த பொதுத்தேர்தலில் மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடி, இந்திய நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காகவும் பல மில்லியன் கணக்கான இளையர்களுக்கு வேலைகளை உருவாக்கித் தருவதற்காகவும் இத்தகைய நடவடிக்கையை எடுத்திருக்கிறார்.

தேர்தல் சமயத்தில் தள்ளிவைக்கப்பட்ட இந்தப் பேச்சுவார்த்தைகள் இன்று தொடங்கப்போவதாக அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்குச் செல்லும் அரசதந்திரக் குழு தெரிவித்தது.

'யுஎஸ்டிஆர்' எனப்படும் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிக் குழு, இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலையும் தகவல் தொழில்நுட்ப அமைச்சின் சில முக்கிய அதிகாரிகளையும் சந்திப்பர்.

இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை டிரம்ப் நாடலாம் என்பது இந்தியாவின் கவலையாக உள்ளது. அவ்வாறு நடந்தால் இந்தியாவுக்குள் அளவுக்கு அதிகமான இறக்குமதிகள் குவிந்து உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி பாதிப்படையலாம் என்று இந்திய அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.