குமாரசாமி பெரும்பான்மையை நிரூபிக்க 18ஆம் தேதி கெடு

குமாரசாமி பெரும்பான்மையை நிரூபிக்க 18ஆம் தேதி கெடு

2 mins read
2101a8d8-ba54-4f82-8b81-bdec94b51e8e
கர்நாடக முதல்வர் குமாரசாமி -

பெங்களூரு: கர்நாடக சட்டசபை யில் நாளை மறுநாள் 18ஆம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அப்போது பெரும்பான்மையை நிரூபிக்கும்படியும் கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு சபாநாயகர் கே.ஆர். ரமேஷ்குமார் அறிவுறுத்தி உள்ளார்.

கர்நாடக அரசியலில் உச்ச்கட்ட குழப்பநிலை நீடித்துவரும் சூழ்நிலையில் எதிர்க்கட்சித் தலைவரான பாஜகவின் எடியூரப்பா, சட்டமன்றத்தில் ஆளுங்கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த கர்நாடக முதல்வர் குமாரசாமி, "நான் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயாராகவே உள்ளேன்.

"எனது அரசு இன்னும் ஆட்டம் காணாமல் வலுவாகத்தான் உள்ளது. ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க கொஞ்சம் காலக்கெடு வேண்டும்," என்று கோரியுள்ளார்.

கர்நாடகாவில் அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானப்படுத்த கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதாதளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கா மல் தோல்வியில் முடிந்த நிலையில் சட்டப்பேரவைக் கூட்டம் நேற்று கூடியது.

அப்போது முதல்வர் குமாரசாமி அரசின் மீது உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று கோரி பாஜக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் கர்நாடக சட்டப்பேரவை இன்றுவரை ஒத்திவைக்கப்பட்டது.

ஆளும் மஜத-காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் 16 பேர் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். அத்துடன் ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ளனர்.

இருப்பினும் தம்மால் பெரும்பான்மையை நிரூபிக்கமுடியும் என அதிரடியாக அறிவித்துள்ளார் குமாரசாமி.

முன்னதாக சபாநாயகர் கே.ஆர். ரமேஷ்குமாரை சந்தித்த மஜத-காங்கிரஸ் தலைவர்கள் எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்காமல் தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தினர்.

அதேபோல் சபாநாயகரை சந்தித்த பாஜக தலைவர் எடியூரப்பா, முதல்வர் குமாரசாமி அரசு பெரும்பான்மையை உடனே நிரூபிக்க உத்தரவிடவேண்டும் என வலியுறுத்தினார்.