பாஜக எம்எல்ஏவின் மருமகன் நீதிமன்ற வாயிலில் கடத்தல்

பாஜக எம்எல்ஏவின் மருமகன் நீதிமன்ற வாயிலில் கடத்தல்

2 mins read
dd04dac0-35ea-4a3f-adea-08d5e54470b7
சாக்‌ஷி மிஸ்ராவின் கணவர் அஜிதேஷ் நீதிமன்ற வாயிலில் வைத்து நேற்று கடத்தப்பட்டது  பெரும் அதிர்ச்சியைத்  தந்தது. -

லக்னோ: சில தினங்களுக்கு முன் காதல் திருமணம் புரிந்த சாக்‌ஷி மிஸ்ரா, தனது உயிருக்கும் தனது கணவர் உயிருக்கும் பாஜக எம்எல்ஏவான தனது தந்தை, சகோதரர் ஆகியோரால் ஆபத்து இருப்பதாகக் கூறி தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி பரேலி காவல்நிலைய மூத்த போலிஸ் அதிகாரியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில் சாக்‌ஷி மிஸ்ராவின் கணவர் நீதிமன்ற வாயிலில் வைத்து நேற்று கடத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியைத் தந்தது.

அலகாபாத் நீதிமன்றத்தில் பாதுகாப்பு அளிக்கக்கோரி பொதுநல மனு ஒன்றை சாக்‌ஷியும் அவரது கணவரும் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெறவிருந்தது.

விசாரணைக்காக நீதிமன்ற வளாகத்தில் நேற்று காலை 8.30 மணியளவில் சாக்‌ஷியும் அவரது கணவரும் நின்றுகொண்டிருந்தபோது அவர்களை கறுப்புக் காரில் வந்த சிலர் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளனர்.

அத்துடன் சாக்‌ஷியின் கணவரான அஜிதேஷை காரில் கடத்திச் சென்றுள்ளனர்.

இதை நேரில் கண்டவர்கள் சாட்சியம் அளித்துள்ளனர்.

நீதிமன்ற வளாகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கடத்திய கார் எண்ணை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

அது ஆக்ராவைச் சேர்ந்த கார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' ஊடகத் தகவலின்படி உத்தரப்பிரதேச மாநிலம், பித்தாரி செயின்பூர் தொகுதி எம்எல்ஏ ராஜேஷ் மிஸ்ராவின் மகளான சாக்‌ஷி மிஸ்ரா அண்மையில் அஜிதேஷ் குமார் என்பவரை திருமணம் செய்தார்.

அஜிதேஷ் குமார் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் இந்த திருமணத்திற்கு ராஜேஷ் மிஸ்ரா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் சமூக வலைத் தளத்தில் காணொளி ஒன்றை வெளியிட்ட சாக்‌ஷி, "எனது வாழ்க்கையை என் விருப்பப்படி வாழ அனுமதியுங்கள். அப்படி வாழவிடாமல் எனக்கோ அல்லது என் கணவரின் உயிருக்கோ ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் உங்களைச் சிறைக்கு அனுப்புவதற்கு கூட தயங்க மாட்டேன்," என்று எச்சரித்திருந்தார்.