தரையைவிட்டுப் புறப்படவேண்டியிருந்த 'சந்திராயன்-2' விண்கலம் இறுதியில் புறப்படாமல் இருந்ததற்கு ஏவுகணையில் ஏற்பட்ட எரிபொருள் கசிவு காரணம் என்று இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்து நிலவுக்கு விண்கலம் அனுப்ப இந்தியா கண்டிருந்த கனவுக்கு இந்தச் சம்பவம் முட்டுக்கட்டை போட்டது. இவ்வாறு நடந்ததற்கான காரணத்தை நிபுணர் குழு ஒன்று ஆராய்வதாகத் தகவல் வெளிவந்துள்ளது. ஏவுகணை பாய்ச்சப்படுவதற்கு 56 நிமிடங்கள் 24 வினாடிகள் இருந்தபோது கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதாக இந்தியாவின் விண்வெளி ஆய்வமைப்பான 'இஸ்ரோ' தெரிவித்தது.
'ஜிஎஸ்எல்வி-எம்கே3' என்ற அந்த ஏவுகணையின் ஹீலியம் எரிபொருள் பகுதியில் கசிவு ஏற்பட்டிருப்பதாக விண்வெளித் திட்டத்தைச் சேர்ந்த மூத்த விஞ்ஞானி ஒருவர் கூறியதாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' பத்திரிகை தெரிவித்தது. ஜூலை மாதத்தின் இறுதிக்குள் விண்கலத்தை விண்வெளிக்குப் பாய்ச்ச விஞ்ஞானிகள் தொடர்ந்து போராடி வருவதாகக் கூறப்படுகிறது.

