புதுடெல்லி: நவீன ஐபோன் கைபேசியைப் பறிக்கும்போது நிகழ்ந்த மோதலில் 15 வயது சிறுவன் படுகொலை செய்யப்பட்டான். இதுதொடர்பாக 3 சிறுவர்கள் கைதாகி உள்ளனர்.
கடந்த 13ஆம் தேதி டெல்லியைச் சேர்ந்த 15 வயதான சிறுவன் விக்கி என்பவன் மாயமானதாக மோதி நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலிசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் அச்சிறுவனின் உடல் தாராபூர் பகுதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் இருப்பது தெரியவந்தது. இறந்து கிடப்பது விக்கிதான் என்பது உறுதியான பின்பு சிறுவனின் மரணத்துக்கான காரணம் குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டனர்.
சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் நிறுவப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராக்களைப் போலிசார் ஆய்வுக்கு உட்படுத்தினர். அப்போது கொலையுண்ட சிறுவனுடன் 3 சிறுவர்கள் மோதியது தெரியவந்தது.
இதையடுத்து 3 சிறுவர்களும் கைது செய்யப்பட்டனர். அதன்பின்னர் நடந்த விசாரணையின்போது சிறுவன் விக்கி வைத்திருந்த நவீன ஐபோனைப் பறிக்க முயன்றதாக இவர்கள் தெரிவித்தனர்.
விக்கி அதைத் தர மறுக்கவே 3 சிறுவர்களுமாகச் சேர்ந்து அவனைப் படுகொலை செய்துள்ளனர்.
கொலை செய்ததை 3 சிறுவர்களும் ஒப்புக்கொண்டபோதிலும் வேறு ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா? எனும் கோணத்திலும் விசாரணை நீடித்து வருகிறது.

