சபாநாயருக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுப்பு

சபாநாயருக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுப்பு

2 mins read

புதுடெல்லி: அதிருப்தி எம்எல்ஏக்களின் பதவி விலகல் குறித்து முடிவெடுக்குமாறு கர்நாடகா மாநில சபாநாயகருக்கு உத்தரவிட இயலாது என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

மாநில சபாநாயகராக இருப்பவர் எம்எல்ஏ ஒருவரின் பதவி விலகலை ஏற்பது அல்லது அவரைத் தகுதி நீக்கம் செய்வது ஆகியவற்றில் அரசியலமைப்பு கடமை உள்ளதா என்பதை மட்டுமே நீதிமன்றம் பார்க்க முடியும் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கருத்து காரணமாக 15 அதிருப்தி எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்ய வழி ஏற்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இதனால் கர்நாடக சட்டப்பேரவையில் 18ஆம் தேதி நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிருப்தி எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பிப் பிழைக்கக்கூடும் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கர்நாடகாவில் ஆளும் கட்சியைச் சேர்ந்த 16 அதிருப்தி எம்எல்ஏக்கள் திடீரென பதவி விலகுவதாக அறிவித்தனர். பின்னர் சபாநாயகரிடம் இது தொடர்பாக கடிதமும் அளித்தனர்.

இந்நிலையில் அரசுக்கு ஆதரவளித்து வந்த சுயேட்சை எம்எல்ஏக்கள் இருவரும் தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டனர். இதனால் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசுக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டது.

இந்த அரசு எந்த நேரத்திலும் கவிழக்கூடும் என்று கூறப்பட்ட நிலையில், எம்எல்ஏக்களின் பதவி விலகலை சபாநாயகர் ஏற்கவில்லை.

இதனால் அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்களது பதவி விலகல் கடிதத்தை ஏற்க வேண்டும் என சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.

இந்த மனுக்களின் மீதான விசாரணை நேற்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதிருப்தி எம்எல்ஏக்களைப் பதவிநீக்கம் செய்யும் நோக்கத்துடனேயே அவர்களுடைய பதவி விலகலை சபாநாயகர் ஏற்க மறுப்பதாக எம்எல்ஏக்கள் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர் முகுல் ரோத்கி வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடங்கிய அமர்வு, எம்எல்ஏக்களின் பதவி விலகல் விவகாரத்தில் சபாநாயகர் எப்படி முடிவெடுக்க வேண்டும் என்று தங்களால் உத்தரவிட இயலாது என்றது.

மேலும், பதவி விலகலுக்கான கடிதம் சரியாக உள்ள நிலையில் அவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடும்வரை சபாநாயகர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்றும் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கருத்தை அடுத்து கர்நாடகா சட்டப்பேரவையில் நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிருப்தி எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரி கிறது.