கவுகாத்தி: மும்பை மாநகரத்தைத் தொடர்ந்து அசாம் மாநிலத்தையும் கனமழை புரட்டிப் போட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக அங்கு பெய்துவரும் தொடர்மழையால் 42 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கனமழைக்கு இதுவரை 15 பேர் பலியாகி இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அசாம் மட்டுமல்லாமல் வடகிழக்கு மாநிலங்கள் பலவும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த சில தினங்களில் இரண்டாவது முறையாக மழை, வெள்ளத்தில் சிக்கித் தவிக்கிறது அசாம். அம்மாநிலத்தில் உள்ள 33 மாவட்டங்களில் தற்போது 30 மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 53 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசிப்பிடங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு 494 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை அசாம் முதல்வரைத் தொடர்புகொண்டு மழை, வெள்ள நிலைமை குறித்து ஆலோசனை நடத்தி உள்ளார் பிரதமர் மோடி. இதையடுத்து மத்திய அரசின் உதவிக்கரம் நீளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே மற்றொரு வடகிழக்கு மாநிலமான மிசோராமில் வெள்ளத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 15 நாட்களாக இங்கு மழை நீடித்து வருகிறது. இதில் 3 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.
அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் 5 மாவட்டங்கள் தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே நாகாலாந்து, மணிப்பூர், மிசோராம், திரிபுரா, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்க ளில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

