சுடச் சுடச் செய்திகள்

அசம்பாவிதத்திலிருந்து நூலிழையில் தப்பித்த விஸ்தாரா விமானம்

ஒரு மணி நேரத்திற்குத் தேவைப்படும் எரிபொருளுக்குப் பதிலாக 10 நிமிடங்களுக்கான எரிபொருளை மட்டும் வைத்திருந்த விஸ்தாரா விமானம் தக்க நேரத்தில் தரையிறங்கியதால் அதன் பயணிகள் உயிர் தப்பினர். இரண்டு நாட்களுக்கு முன்னர், 153 பயணிகளுடன் அந்த விமானம் மும்பையிலிருந்து டெல்லிக்குச் சென்றுகொண்டிருந்தது. மோசமான பருவநிலை காரணமாக விமானம் லக்னோவுக்குத் திசைத்திருப்பப்பட்டது.  

லக்னோவில் தரையிறங்கியபோது விமானத்தொட்டிக்குள் கிட்டத்தட்ட 300 கிலோகிராம் எரிபொருள் மட்டுமே இருந்ததாக  விஸ்தாரா நிறுவனம், என்டிடிவி தொலைக்காட்சியிடம் தெரிவித்தது. அந்த அளவு எரிபொருளுடன் 10 நிமிடங்களுக்கு மட்டும்தான் தொடர்ந்து பறக்கமுடியும் என்றது விஸ்தாரா. பத்து நிமிடங்களுக்குள் விமானம் தரையிறங்காமல் இருந்தால் விமானம் நடுவானிலிருந்து கீழே விழுந்து பெரும் அசம்பாவிதம் நேரிட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

விதிமுறைகளின்படி போதிய எரிபொருள் விமானத்தில் ஏற்றப்பட்டிருந்த போதிலும், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுப்பாதையின் தரையிறங்கும் இடம் எதிர்பாராதவிதமாக மங்கலாகக் காணப்பட்டது எரிபொருள் பற்றாக்குறைக்கான காரணம் என்று விஸ்தாரா அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. 

விமானப் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை அதிமுக்கியமாகக் கருதுவதாகவும் விஸ்தாரா கூறியது.

சிங்கப்பூர் உள்ளிட்ட அனைத்துலக பயண இடங்களுக்குச் சேவை வழங்குவதாக விஸ்தாரா கடந்த வாரம் அறிவித்த நிலையில் இந்தச் சம்பவம் அந்த விமான நிறுவனத்தின் நம்பகத்தன்மையைப் பாதித்துள்ளது.