கர்நாடகா: இன்று பலப்பரிட்சை

கர்நாடகா: இன்று பலப்பரிட்சை

2 mins read

கர்நாடகா: இன்று பலப்பரிட்சைபெங்களூரு: கர்நாடக சட்ட மன்றத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது.

மதச்சார்பற்ற ஜனதாதளம்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு தலைமை வகிக்கும் முதல்வர் குமார சாமி, தான் வெற்றியைச் சாதித்துக் காட்டப்போவதாக சூளுரைத்து இருக்கிறார்.

அதேவேளையில், பாஜக கர்நாடக தலைவர் எடியூரப்பா, இன்று ஆட்சி கவிழப்போவது உறுதி என்று கூறி இருக்கிறார்.

இருவரும் தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்து கடந்த சில நாட்களாக பல கோயில்களுக்கும் சென்று சாமி கும்பிட்டு வந்தனர்.

இந்த நிலையில், பதவி விலகியது விலகியதுதான். பின்வாங்கமாட்டோம் என்று அதிருப்தி எம்எல்ஏக்கள் 16 பேரும் நேற்று தெரிவித்தனர்.

எம்எல்ஏக்களின் பதவி விலகலை ஏற்றுக்கொள்ளும்படி சட்டமன்ற நாயகருக்கு உத்தரவிட முடியாது என்றும் அதேவேளையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கும்படி அதிருப்தி எம்எல்ஏக்களைக் கட்டாயப்படுத்த முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் நேற்று பரபரப்பாக தீர்ப்பு வெளி யிட்டது. இந்தத் தீர்ப்பு தங்களுக்குச் சாதகமாக இருக்கிறது என்று அதிருப்தி எம்எல்ஏக்களும் பாஜக தலைவர் எடியூரப்பாவும் தெரிவித்தனர்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பற்றி கருத்து தெரிவித்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 16 பேரும் தாங்கள் இன்று சட்ட மன்றத்திற்குச் செல்லப் போவதில்லை என்று கூறினர்.

கர்நாடக சட்டமன்றத்தின் மொத்த இடங்கள் 224. இதில் ஆளும் கூட்டணிக்கு 116 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். பாஜகவுக்கு 107 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள்.

16 எம்எல்ஏக்கள் பதவி விலகி இருப்பது ஏற்றுக்கொள்ளப்பட்டால் ஆளும் கூட்டணிக்கு ஆதரவு 100 ஆகக் குறைந்துவிடும்.

113 உறுப்பினர்கள் இருந்தால் ஆட்சி தொடரலாம்.