அமைச்சர்களைக் கண்காணிக்க உத்தரவு

அமைச்சர்களைக் கண்காணிக்க உத்தரவு

2 mins read

புதுடெல்லி: நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பங்கெடுத்துக்கொள்ளாத அமைச்சர்களைப் பிரதமர் மோடி கண்காணிக்கத் தொடங்கி இருக்கிறார்.

நாடாளுமன்றக் கூட்டத்திற்கு யார் யார் வரவில்லை என்பதை தெரிவிக்கும் பட்டியலை நாள்தோறும் தயாரித்து தன்னிடம் தாக்கல் செய்யும்படி நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஜோஷிக்கு அவர் உத்தரவிட்டு இருக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, நாடாளுமன்ற பாஜக உறுப்பினர்கள் அரசியலுக்கு அப்பாலும் செயல்பட்டு மக்களுக்கு உதவவேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியதாக கட்சிப் பிரமுகர்கள் தெரிவித்தனர்.

உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தொகுதிகளுக்குச் சென்று அதிகாரிகளுடன் சேர்ந்து மக்களின் பிரச்சினைகளை விவாதிக்க வேண்டும் என்று பிரதமர் கட்டளை பிறப்பித்து இருக்கிறார்.

பாஜக பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய் வர்கியா என்பவரின் புதல்வரும் மத்தியப் பிரதேச மாநில பாஜக எம்எல்ஏவுமான ஆகாஷ் விஜய் வர்கியா என்பவர் பொது இடத்தில் அதிகாரி ஒருவரைத் தாக்கியதைக் காட்டும் காணொளி வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பிரதமர் இவ்வாறு கட்டளை பிறப்பித்து இருக்கிறார் என்பது முக்கியமானதாக இருக்கிறது.

அண்மைய சில வாரமாக நடந்து வரும் நாடாளுமன்ற வரவுசெலவுத் திட்ட கூட்டத் தொடரில் பல அமைச்சர்கள் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் அமைச்சர்கள் பதுங்கிவிடுகிறார்கள் என்று எதிர்க்கட்சியினர் மன்றத்தில் புகார் செய்தனர். இந்த நிலையில், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை செவ்வாய்க்கிழமை புதுடெல்லியில் பிரதமர் கூட்டினார்.

நாடாளுமன்றத்துக்கு வராத அமைச்சர்களைப் பிரதமர் கடுமையாக எச்சரித்தார் என்று தெரிவிக்கப்பட்டது. பிரதமரின் இந்த அறிவிப்பு காரணமாக பல அமைச்சர்கள் கலக்கம் அடைந்து இருக்கிறார்கள் என்று தெரிகிறது.

இதனிடையே, இப்போதைய கூட்டத் தொடர் இம்மாதம் 26ஆம் தேதிக்கு அப்பாலும் நீடிக்கும் என்று கூறப்படுகிறது.