போபால்: மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள தாமோ மாவட்டத்தில் இருக்கும் பதியாகார் என்ற ஊரைச் சேர்ந்த இமார்தி தேவி என்பவரை பாம்பு கடித்துவிட்டது.
உடனடியாக உறவினர்கள் அவரை தாமோ நகர மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனாலும் குடும்பத்தார் மருத்துவர்களை எல்லாம் நம்பாமல் மருத்துவமனைக்கே மந்திரவாதியை வரவழைத்து பாம்புக் கடிக்குச் சில சடங்குகளை நடத்தினார்கள்.
நோயாளி அனுமதிக்கப்பட்டு இருந்த வார்டுக்கு உள்ளேயே மந்திரவாதி அந்த நோயாளிக்கு மந்திர சிகிச்சை அளித்தார்.
இதை அங்கிருந்த ஒரு தாதி பார்த்தார் என்றாலும் அந்தத் தாதி எதுவுமே செய்யாமல் இருந்துவிட்டார் என்று மருத்துவமனை தகவல் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
இருந்தாலும் இந்தச் சம்பவம் நிகழ்ந்தபோது பணியில் இருந்த காவலர்களுக்கும் மருத்துவருக்கும் இது பற்றி தெரியாது என்று நிர்வாகம் குறிப்பிட்டது.
மந்திரவாதி சிகிச்சை அளித்ததைப் பார்த்த தாதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.

