3 ஆண்டுகளில் ஆறு மத்திய கிழக்கு நாடுகளில் 20,423 இந்தியர்கள் மரணம்

3 ஆண்டுகளில் ஆறு மத்திய கிழக்கு நாடுகளில் 20,423 இந்தியர்கள் மரணம்

2 mins read

புதுடெல்லி: மத்திய கிழக்கில் உள்ள ஆறு நாடுகளில் கடந்த மூன்றாண்டு காலத்தில் 20,000 பேருக்கும் அதிக இந்தியர்கள் மரணம் அடைந்து இருக்கிறார்கள் என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு சிற்றரசுகள் ஆகிய நாடுகளில் 2016 ஜனவரி முதல் 2019 மே மாதம் வரை 20,423 இந்தியர்கள் மாண்டு இருக்கிறார்கள் என்று நாடாளுமன்றத்தில் எழுத்து மூலமாகத் தாக்கல் செய்த அறிக்கையில் அமைச்சு தெரிவித்து இருக்கிறது.

சவூதி அரேபியாவில் மட்டும் 9,057 இந்தியர்கள் இறந்து இருக்கிறார்கள். உலகம் முழுவதும் பல நாடுகளிலும் மரணம் அடைந்துள்ள மொத்த இந்தியர்களில் ஏறக்குறைய 71 விழுக்காட்டினர் இந்த ஆறு நாடுகளில் மாண்டு இருக்கிறார்கள் என்று வெளியுறவு துணை அமைச்சர் வி. முரளீதரன் அந்த அறிக்கையில் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் கடந்த மூன்றாண்டுகளில் 28,794 இந்தியர்கள் மாண்டு இருக்கிறார்கள் என்று 126 நாடுகளை உள்ளடக்கிய அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

வெளிநாட்டில் இந்தியர்கள் மரணம் அடையும்போது இந்தியாவில் உள்ள அவர்களின் குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் அரசாங்கம் செய்து வரும் பல உதவிகளையும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.

வெளிநாடுகளில் இந்தியர்களின் மரணச் சம்பவங்கள் நீதிமன்றத்துக்குச் செல்லும்போது இந்தியத் தூதரகங்கள் வழக்குகளில் உதவி வருவதாகவும் அறிக்கை குறிப்பிட்டு உள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் குடும் பங்களுக்கு இழப்பீடுகளைப் பெற்று தர அரசாங்கம் முழுமூச்சாகப் பாடுபடுகிறது. மாண்டுவிடும் இந்தியர்களின் முதலாளிகளையும் காப்புறுதி நிறுவனங்களையும் அணுகி இந்திய அரசு பல காரியங்களையும் செம்மையான முறையில் செய்து வருவதாக அறிக்கை குறிப்பிட்டது.

வெளிநாட்டில் மாண்டுவிடும் இந்தியரின் உடலை இந்தியாவுக்கு கொண்டுவரவும் மேலும் பல உதவிகளையும் இந்திய அரசு செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.