புதுடெல்லி: அமெரிக்கா கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளிநாட்டினர்களுக்குக் கொடுத்த H-1B விசாக்களில் 67% முதல் 72% வரை இந்தியர்களுக்குக் கிடைத்தது என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
பட்டத்தொழிலர்கள் அமெரிக்க நிறுவனங்களில் வேலை பார்க்க ஏதுவாக அந்த விசா வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டு வருகிறது.
மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்காவின் H-1B விசா ஏற்பாட்டில் இதுவரையில் பெரிய அளவில் மாற்றம் இடம்பெறவில்லை என்று தெரிவித்தார்.
இதன் தொடர்பில் அமெரிக்க நிர்வாகத்தோடும் நாடாளுமன்றத்தோடும் இந்திய அரசாங்கம் அணுக்கமாகக் கலந்து ஆலோசனை நடத்தி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பொம்பியோ, கடந்த மாதம் இந்தியாவுக்கு வந்தபோதுகூட அவருடன் இந்த விசா பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது என்று அமைச்சர் தெரிவித்தார். வேலை விசாவில் இந்தியர்கள் அமெரிக்கா செல்வதாகவும் அவர் கூறினார்.

