பெங்களூரு: கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான அரசாங்கம் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டதால் பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா உட்பட பாஜக உறுப்பினர்கள் சட்டசபையிலே படுத்து உறங்கி இரவைக் கழித்தனர்.
இதனால் கர்நாடக சட்டசபை பாஜகவினரின் தற்காலிக தங்குமிடமாக மாறியது.
கர்நாடகாவை ஆளும் காங் கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணியிலிருந்து 16 எம்எல்ஏக்கள் பதவி விலகியதால் மாநிலத்தில் ஆட்சி கவிழும் ஆபத்து ஏற்பட்டது.
இந்தச் சூழ்நிலையில் நேற்று முன்தினம் 11.15 மணிக்கு கர்நாடக சட்டசபை கூடியபோது கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டதால் நம்பிக்கை கோரும் முதல்வர் குமாரசாமி கொண்டு வந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை.
மேலும் மூன்று முறை சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. நாள் முழுவதும் ஆளும் கூட்டணி கட்சியினரும் ஆட்சியைக் கைப்பற்ற துடிக்கும் பாரதிய ஜனதா உறுப்பினர்களும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மறுநாள் (நேற்று) மதியம் 1:30 மணிக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி முதல்வர் குமார சாமிக்கு ஆளுநர் உத்தரவிட்டார்.
இதனால் சட்டசபையிலேயே தங்குவதற்கு பாஜகவினர் முடிவு செய்தனர்.
அவர்களுக்கு உணவு, படுக்கை விரிப்புகள் விநியோகிக்கப்பட்டன.
சட்டசபையில் பாஜக உறுப்பினர்கள் பலர் தரையில் விரிப்பை விரித்து படுத்துறங்கி மறுநாள் குமாரசாமி அர சாங்கத்துக்கு எதிராக வாக்கு அளிக்க தயாராக இருந்தனர். இதனால் கர்நாடக சட்டசபை தற்காலிக தங்குமிடமாக மாறியது.

