மம்தா பானர்ஜி, சரத் பவார் கட்சிகள்; தேசிய தகுதியை இழக்கும் அபாயம்

மம்தா பானர்ஜி, சரத் பவார் கட்சிகள்; தேசிய தகுதியை இழக்கும் அபாயம்

2 mins read

புதுடெல்லி: தேசிய அளவில் செயல்படும் இரு கட்சிகள் தேசிய தகுதியை இழக்கும் அபாயத்தை எதிர்நோக்குகின்றன.

திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுக்கு வழங்கப்பட்ட தேசிய தகுதியை ரத்து செய்வது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று கட்சிகளும் சிறப்பான முறையில் செயல்படவில்லை. தேசிய தகுதிக்குத் தேவையான குறைந்தபட்ச வாக்குகளைப் பெறாததால் உங்களுக்கு வழங்கப்பட்ட தேசிய தகுதியை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று கேள்வியெழுப்பி தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளும் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தன.

சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஐந்து இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. அதுபோல மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசுக்கு 22 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 இடங்களே கிடைத்தன.

தேர்தலில் ஆறு விழுக்காடு வாக்குகள் பெற்று இருந்தால்தான் ஒரு கட்சிக்கு அரசியல் கட்சி என்ற தகுதியை தேர்தல் ஆணையம் வழங்கும்.

அது போல ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் குறிப் பிடத்தக்க அளவுக்கு இடங்கள் கிடைத்தால்தான் தேசிய கட்சி என்ற தகுதியை ஒரு கட்சியால் பெற முடியும். மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரசும் இதுவரை தேசிய கட்சி என்ற தகுதியுடன் இருந்தன. ஆனால் அண்மைய நாடாளுமன்றத் தேர்தலில் அந்த இரண்டு கட்சிகளும் படுதோல்வியைத் தழுவின.

இதன் காரணமாக தேசியவாத காங்கிரசும், திரிணாமுல் காங்கிரசும் தேசிய கட்சி என்ற தகுதியை இழக்கின்றன.

இதன் தொடர்பில் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ள தேர்தல் ஆணையம், ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதிக்குள் பதில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து ஆகஸ்ட் மாதத்தில் மம்தா, சரத்பவார் கட்சிகள் தேசிய தகுதியை இழக்க நேரிடலாம்.

மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய இரண்டு கட்சிகள் ஏற்கெனவே தேசிய தகுதியை இழந்துவிட் டன.

இதனால் இந்தியாவில் காங்கிரசும் பாரதிய ஜனதாவும் மட்டுமே தேசிய தகுதியுடன் நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.