முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காலமானார்

புதுடெல்லி: டெல்லி முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித் (81) நேற்று மாலை காலமானார்.

1988ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை டெல்லி முதல்வராக 15 ஆண்டுகள் பதவி வகித்தவர் ஷீலா தீட்சித்.

முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தி தலைமையிலான மத்திய  அமைச்சரவையில் இணை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார். அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

உடல் நலக்குறைவால் சில நாட்களுக்கு முன்னர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஷீலா தீட்சித் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி  நேற்று மாலை அவர் காலமானார்.

இவரது மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஷீலா தீட்சித் மறைவை அடுத்து காங்கிரஸ் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில், “ஷீலா தீட்சித் இறப்பு குறித்து வரும் செய்தியால் நாங்கள் வருத்தமடைகிறோம். அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கல்கள். இந்தக் கடினமான நேரத்தில் மன தைரியத்துடன் இருப்பார்கள் என்று நம்புகிறோம்” என்று கூறியுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி, “மிகவும் கரிசனமான மனம் கொண்டவர் ஷீலா தீட்சித். டெல்லியின் முன்னேற்றத்துக்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு அவர் உழைத்துள்ளார். அவரது குடும்பத்தாருக்கும் அவரைச் சேர்ந்தவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்," என்றார்.