போலி ஏஎடிம் அட்டை: சென்னையில் பல்கேரிய கொள்ளையர்கள் கைவரிசை

போலி ஏஎடிம் அட்டை: சென்னையில் பல்கேரிய கொள்ளையர்கள் கைவரிசை

2 mins read

சென்னை: தானியக்க பணம் வழங்கும் இயந்திரம் எனப்படும் ஏடிஎம்களில் ஸ்கிம்மர் கருவி மூலம் வாடிக்கையாளர்களின் பணத்தைத் திருடி வந்த பல்கேரிய கும்பலை சென்னை போலிசார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து 7.5 லட்ச ரூபாய், 13,000 டாலர்கள் ரொக்கமாகவும் மடிக்கணினி, கைபேசிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

லியூம்போமிர், நிகோலாய், போரிஸ் என்ற அந்த மூவரும் கடந்த 13ஆம் தேதி சென்னை வந்தவுடன் காரப்பாக்கத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கினர்.

அந்தத் தங்கு விடுதி ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் போலிசார் அவர்களைக் கைது செய்தனர்.

கடந்த வியாழக்கிழமை பாதுகாப்புப் பெட்டகத்தின் ரகசிய எண்ணை மறந்துவிட்டதாகக் கூறி விடுதி ஊழியர்களிடம் அந்த மூவரில் ஒருவர் உதவி கேட்டுள்ளார்.

இதையடுத்து, உதவிக்குச் சென்ற ஊழியர் அந்தப் பாதுகாப்பு பெட்டகத்தில் ரூபாய் நோட்டுகள் கத்தை கத்தையாக இருந்ததைக் கண்டு சந்தேகம் எழுந்ததையடுத்து விடுதி நிர்வாகத்திடம் அவர் கூறியுள்ளார்.

மூவரும் வெளியே சென்றிருந்த சமயம், நிர்வாகத்தினர் அறையைச் சோதனையிட்டனர். அப்போது, ஏடிஎம் அட்டை, ரகசிய எண் ஆகியவற்றைக் கண்டறிய உதவும் ஸ்கிம்மர் கருவிகள், ஏராளமான ஏடிஎம் அட்டைகள் இருப்பதைக் கண்டனர்.

உடனடியாக அவர்கள் கண்ணகி நகர் போலிசுக்குத் தகவல் அளித்தனர்.

விடுதிக்குச் சென்ற போலிசார் பல்கேரிய நாட்டவர் மூவரையும் கைது செய்ததாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகச் செய்தி கூறுகிறது.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்கவரும் வாடிக்கையாளர்களின் ரகசியத் தகவல்களைத் திருடுவதற்காக ஸ்கிம்மர் என்ற கருவியை இவர்கள் பொருத்துவது வெளிச்சத்திற்கு வந்தது.

மேலும் வெளிநாட்டில் திருடப்பட்ட தகவல்களுடன் சென்னை வந்த இவர்கள், அதை வைத்து 40க்கும் மேற்பட்ட போலி அட்டைகளைத் தயாரித்துள்ளனர்.

அதைப் பயன்படுத்தி சென்னையில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களில் லட்சக்கணக்கில் பணம் எடுத்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதே பாணியில் மோசடி செய்த பல்கேரியாவைச் சேர்ந்த இருவர், கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் சென்னை அயனாவரத்தில் உள்ள ஏடிஎம் மையத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதற்கும் இந்தக் கும்பலுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.