காஞ்சிபுரம்: பக்தர்கள் சிரமமின்றி தரிசிக்க ஏதுவாக அத்திவரதரை இடமாற்றம் செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் அத்திவரதரைத் தரிசனம் செய்ய ஒரே நாளில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் திரண்டதால் கோயில் சுற்றுப் பிரகாரங்களில் வரிசையில் செல்ல முடியாத அளவுக்கு பெரும் நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் பக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் வழிபடும் இடத்தை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதுகுறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தலைமை செயலாளர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், போலிஸ் டி.ஜி.பி. மற்றும் அந்தந்த துறை செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
பக்தர்கள் சிரமமின்றி தரிசிக்க ஏதுவாக அத்திவரதரை வேறு இடத்தில் வைத்து வழிபாடு செய்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுகிறது. இதுதொடர்பாக அர்ச்சகர்களிடம் பேசி வருகிறோம்," என்றார்.

