கோல்கத்தா: அண்மைய கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க விடாமல் காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதன் மூலம் உத்தரப்பிரதேச மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு நிலை மிக மோசமாக உள்ளதாக அவர் சாடியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் அண்மையில் இரு பிரிவினர் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து அரங்கேறிய வன்முறைச் சம்பவங்களின்போது இருதரப்பிலும் ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர்.
இந்தக் கலவரத்தில் 10 பேர் உயிரிழக்க, படுகாயமடைந்த 24 பேருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாரைச் சந்தித்து ஆறுதல் கூற பிரியங்கா காந்தி சோன்பத்ராவுக்குச் சென்றார்.
ஆனால் அவர் அங்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து இரவு முழுவதும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார் பிரியங்கா. பின்னர் அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, உத்தரப்பிரதேசத்தில் பொதுமக்கள் காரணம் ஏதும் இன்றிஅதிகளவில் தாக்கப்படுவதாகக் குற்றம் சாட்டினார்.
உத்தரப்பிரதேசத்தில் என்கவுன்ட்டர் வகையிலான துப்பாக்கிச் சூட்டில் மட்டும் இதுவரை 1,100 பேர் கொல்லப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மத்திய அரசு இவ்விஷயத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றார்.
"மேற்கு வங்கத்தில் ஏதேனும் கலவரம், பிரச்சினை என்றால் உடனடியாக மத்திய அரசு உண்மை கண்டறியும் குழுவை அனுப்பி வைக்கிறது. அதேபோல் உத்தரப்பிரதேசத்துக்கு நாங்கள் ஒரு குழுவை அனுப்பினால் அம்மாநிலப் போலிசார் தடுத்து நிறுத்துகிறார்கள். நாங்கள் சொல்ல வருவதைக் கேட்பதற்குக் கூட அவர்கள் தயாரில்லை. அனைவரும் விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அனைவரது குரல்களும் செவிமடுக்கப்பட வேண்டும்," என்றார் முதல்வர் மம்தா.
பிரியங்கா காந்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதில் எந்தத் தவறும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், உத்தரப்பிரதேசத்தில் பல அப்பாவி மக்கள் விசாரணையின்றி படுகொலை செய்யப்படுவதாகக் கவலை தெரிவித்தார்.
"மேற்கு வங்கத்தில் தடை உத்தரவு போடப்பட்டால் அதை மீறுவதையே பாஜகவினர் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். தடையுத்தரவு அமலில் உள்ள பகுதிகளுக்கு 50 வாகனங்களில் அணிவகுத்துச் செல்வர்.
"ஆட்சி, நிர்வாகம் என எந்தத் தரப்பின் உத்தரவையும் அவர்கள் செவிமடுப்பதே இல்லை. ஆனால், பிரியங்கா பாதிக்கப்பட்ட மக்களை நான்கு பேருடன் மட்டும் சென்று சந்திப்பதாகக் கூறியும் கூட அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை," என்றார் முதல்வர் மம்தா பானர்ஜி.

