புதுடெல்லி: கல்விக்காக இடம்பெயரும் மாணவ மாணவியரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2011ஆம் ஆண்டு வரையிலான புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் மாநிலங்களுக்கிடையே இடம்பெயரும் மாணவ மாணவியரின் எண்ணிக்கையானது 5.4 மில்லியன் எனத் தெரிய வந்துள்ளது.
கடந்த 2002க்கு முந்தைய 9 ஆண்டுகளில் இடம் பெயர்ந்தவர்களைவிட இந்த எண்ணிக்கை அதிகமாகும்.
பெரும்பாலும் பின்தங்கிய மாநிலங்களில் இருந்தே அதிகமானோர் இடம்பெயர்வதாகத் தெரிகிறது.
இதற்கிடையே கல்விக்கு அடுத்தபடியாக வேலை வாய்ப்பின் பொருட்டும் பெண்கள் அதிகம் இடம்பெயர்கிறார்கள்.
இந்த எண்ணிக்கை முந்தைய கணக்கெடுப்பு காலத்தைவிட 2011ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் 31 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
ஆண்களின் எண்ணிக்கை இதே காலகட்டத்தில் 10 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. நாடு முழுவதும் அச்சமயம் 60 லட்சம் பேர் பணி நிமித்தம் இடம்பெயர்ந்துள்ளனர்.
டெல்லியில் கடந்த 2001 வரை 9 ஆயிரம் பெண்கள் இடம்பெயர்ந்தனர் எனில், அடுத்த கணக்கெடுப்பில் இது 23 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
மேற்குவங்கம், பீகார், ஒடிஷா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் கடந்த 2001ஐ விட 2011ல் கல்விக்காக இடம்பெயர்ந்த பெண்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.

