இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள 132 கிராமங்களில் கடந்த மூன்று மாதங்களில் ஒரு பெண் குழந்தைகூட பிறக்கவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது.
அந்தக் கிராமங்களில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 216 குழந்தைகள் பிறந்திருப்பதாக அதிகாரபூர்வத் தகவல்கள் கூறுகின்றன. ஆனாலும், அந்தக் குழந்தைகளுள் ஒன்றுகூட பெண் குழந்தை இல்லை என்பது மாவட்ட நிர்வாகத்தை குழப்பத்தில் ஆழ்த்தி
உள்ளது.
"பெண் குழந்தை பிறப்பு விகிதம் பூஜ்ஜியமாக அல்லது ஒற்றை இலக்கத்தில் இருக்கும் பகுதிகளை அடையாளம் கண்டுள்ளோம். ஆண்-பெண் குழந்தை பிறப்பு விகிதம் இவ்வளவு மோசமாக இருப்பதற்கான காரணத்தைக் கண்டறிய அப்பகுதிகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். இதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க விரிவான ஆய்வு ஒன்றும் நடத்தப்படும்," என்று சொன்னார் அம்மாவட்ட நீதிபதி டாக்டர் ஆஷிஷ் சௌகான்.
அத்துடன், இந்த விவகாரம் தொடர்பில் 'ஆஷா' எனப்படும் சமூக சுகாதார ஊழியர்களுடன் அவசரநிலைக் கூட்டத்தைக் கூட்டி விவாதித்த திரு ஆஷிஷ், சம்பந்தப்பட்ட பகுதிகளை அணுக்கமாகக் கண்காணித்து, குழந்தைப் பிறப்பு பாலின விகிதம் தொடர்பில் விரைவில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
ஒரு பெண் குழந்தைகூட பிறக்காததைப் பார்க்கும்போது அந்தப் பகுதிகளில் பெண் சிசுக் கொலை இன்னும் இருப்பது தெளிவாகத் தெரிகிறது என்றார் திருவாட்டி கல்பனா தாக்குர் எனும் சமூக ஆர்வலர்.
பெண் சிசுக்கொலையைத் தடுக்க அரசாங்கமும் மாவட்ட நிர்வாகமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில், பெண் சிசுக் கொலையை முடிவுக்குக் கொண்டு வர அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் சிவ் சிங்க தன்வால் வலியுறுத்தியுள்ளார்.

