கேரளாவில் கனமழைக்கு எட்டு பேர் பலி

கேரளாவில் கனமழைக்கு எட்டு பேர் பலி

2 mins read
85a78a7c-cd9a-481c-ac81-3a2491aca7a0
கேரள மாநிலத்தின் கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் கனமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் 24 மணிநேரத்திற்கு கேரளாவில் கனமழை பெய்யும் என்றும் பலத்த காற்று வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. படம்: ஊடகம் -

திருவனந்தபுரம்: மீண்டும் தீவிரம் அடைந்துள்ள தென்மேற்கு பருவமழையின் காரணமாக கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி வருகிறது.

இந்த கனமழைக்கு கடந்த நான்கு நாட்களில் மட்டும் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கடந்த 24 மணி ேநரத்தில் மட்டும் மூவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் 750க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருவதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்திய வானிலை மையம் கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக அப்பகுதிகளுக்கு நேற்று சிவப்பு எச்சரிக்கையை விடுத்திருந்தது.

இதைத்தொடர்ந்து இந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளையும் மூடுவதற்கு அதிகாரிகள் உத்தர விட்டனர்.

கேரளாவின் வட பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டி வரும் நிலையில் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து திருவனந்தபுரம், கொல்லம் கடற்கரைப் பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

எர்ணாகுளம் பகுதியில் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த தமிழகத்தின் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் சுவர் இடிந்து விழுந்ததில் பலியானார். அவரது நண்பர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

கண்ணூரில் மணிக்கடவு என்ற பகுதியில் நிதீஷ் என்பவர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.

அதேபோல கிடங்கநல்லூர் பகுதியிலும் பிஜூ என்பவர் ஆற்றில் மூழ்கி பலியானார்.

கோட்டயம் பகுதியில் காணாமல் போயிருந்த மனோஜ் என்ற ஆட்டோ ஓட்டுநரின் உடல் ஆற்றில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

அதேபோல திருச்சூரில் விஷ்ணு என்ற 19 வயது மாணவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பலியானார். ஏற்கனவே மழைக்கு மேலும் மூவர் பலியாகியிருந்த நிலையில் ஆகமொத்தம் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

தாழ்வான பகுதியில் தங்கியிருந்தவர்கள் 12 நிவாரண முகாம்களில் அடைக்கலம் அடைந்துள்ளனர்.

மேலும் 24 மணிநேரத்திற்கு கேரளாவில் கனமழை பெய்யும் என்றும் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக வீடுகளிலேயே இருக்குமாறு அதிகாரிகள் அறுவுறுத்தியுள்ளனர்.