ஹைதராபாத்: பாலாற்றில் ஏற்கெனவே 29 தடுப்பணைகளைக் கட்டி தமிழகத்திற்கு வரும் தண்ணீரைத் தடுத்துள்ளது ஆந்திர அரசு. இந்த நிலையில் இதில் 21 தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிக்கும் பணிக்கு ரூ.43 கோடி நிதி ஒதுக்கி அதற்கான பணி குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் இடையில் தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள பணிகள் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதில் கங்குந்தி என்ற இடத்தில் கட்டப்பட்ட தடுப்பணையை 22 அடி உயரத்திலிருந்து 40 அடியாக உயர்த்தியுள்ளது. மேலும் பகிலிரோ என்ற இடத்தில் உள்ள தடுப்பணையின் உயரத்தையும் சுமார் 40 அடிக்கு உயர்த்தும் கட்டுமானப் பணிகள் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதுடன் விவசாயம் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

