இரும்புத் தொழில்துறை ஸ்டீல் உற்பத்தியில் உச்சம் தொட்ட இந்தியத் தொழிலதிபர் லட்சுமி மிட்டலின் இளைய சகோதரரும் தொழிலதிபருமான பிரமோத் மிட்டல் மோசடிப் புகாரில் ஐரோப்பாவின் போஸ்னியா நாட்டில் நேற்று கைது செய்யப்பட்டார்.
போஸ்னியாவின் லுகாவாக் நகரில் நிலக்கரி தொடர்பான தொழிற்சாலை ஒன்றில், 2003ஆம் ஆண்டிலிருந்து முக்கிய பங்குதாரராக இவர் இருந்து வந்துள்ளார்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரியும் 'ஜிகில்' எனும் பெயர் கொண்ட இத்தொழிற்சாலையில் நிதி மோசடி நடந்துள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் ஒருவர் பிரமோத் மிட்டல் மீது குற்றஞ்சாட்டியிருந்தார்.
அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி பொருளாதார குற்றங்களில் பிரமோத் மிட்டல், 63, ஈடுபட்டதாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்திய மதிப்பில் ஏறத்தாழ 20 கோடி ரூபாய் (S$4 மில்லியன்) மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில், பிரமோத் மிட்டல், அந்தத் தொழிற்சாலையின் பொது மேலாளர் பரமேஷ் பட்டாச்சார்யா மற்றும் நிர்வாகி ஒருவர் என மொத்தம் மூன்று பேரை போஸ்னியா போலிசார் கைது செய்தனர். நான்காவதாக சந்தேகிக்கப்படும் மேலும் ஒருவருக்கு கைதாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரை போலிசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சந்தேக நபர்கள் மூவரும் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரமோத் மிட்டல் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானால், அவருக்கு 45 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
2013ஆம் ஆண்டு ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் தமது 26 வயது மகளின் ஆடம்பர திருமணத்திற்கு 82 மில்லியன் அமெரிக்க டாலரை பிரமோத் மிட்டல் செலவழித்தது நினைவுகூரத்தக்கது. வரலாற்றிலேயே ஆகச் செலவுமிக்க திருமணங்களில் ஒன்றாக அப்போது அது கருதப்பட்டது.
இதற்கு முன்னர் பிரமோத் மிட்டல் சிக்கிய ஒருசில வழக்குகளில் அவரது சகோதரர் லட்சுமி மிட்டல் அவரைப் பிணையில் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.

