இந்திய மக்களை வியக்க வைத்துள்ள சம்பவம் ஒன்றில், ஓடும் ரயிலிலிருந்து கீழே விழுந்த சுரங்கத் தொழிலாளி ஒருவர் வயிறு கிழிந்து, குடல் வெளியே வந்த நிலையில் அருகிலுள்ள ரயில் நிலையத்திற்கு ஒன்பது கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுனில் சௌகான் (படம்) எனும் அந்த 24 வயது ஆடவர், கடந்த திங்கட்கிழமை தமது சகோதரர் பிரவீன் மற்றும் சில சுரங்கத் தொழிலாளர்களுடன் சேர்ந்து வேலை தேடி ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்துக்கு பயணம் மேற்கொண்டார்.
சகோதரர்கள், தொழிலாளர்கள் அனைவரும் ரயிலின் கீழ் அடுக்கில் அமர்ந்திருந்தனர். அவர்களுடன் சேர்ந்து சுனிலும் கதவுக்கு அருகில் அமர்ந்து தூங்கிய நிலையில் பயணம் மேற்கொண்டார்.
பின்னிரவு 2 மணியளவில், தெலுங்கானா மாநிலத்தின் ஹசன்பர்தி அருகே உப்பல் ரயில் நிலையத்தைக் கடந்து ரயில் சென்றுகொண்டிருந்தபோது கழிவறைக்குச் செல்ல சுனில் எழுந்தார். அப்போது ரயில் வளைவைக் கடந்தகொண்டிருந்ததால் நிலைதடுமாறி கதவு வழியாக அவர் ரயிலிலிருந்து கீழே விழுந்தார்.
ரயில் பயணித்த சத்தத்தில் சுனில் வெளியில் விழுந்தது அருகிலிருந்த யாருக்கும் கேட்கவில்லை.
விழுந்த வேகத்தில் தண்டவாளத்துக்கு அருகிலிருந்த இரும்புக் கம்பியில் அவர் பலமாக மோதினார். இந்த விபத்தில் சுனிலின் வயிறு கிழிக்கப்பட்டு உள்ளே இருந்த குடல் வெளியில் வந்துவிட்டது. அந்த இருட்டில் கைபேசி கீழே விழுந்துவிட்டதையும் அவரால் கண்டுபிடிக்கமுடியவில்லை. நீண்ட நேரம் உதவிக்காக சுனில் போராடியபோதும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உதவிக்கு யாரும் வரவில்லை.
வேறு வழியின்றி தமது சட்டையைக் கழற்றி, கிழிந்த வயிற்றைச் சுற்றி இறுக்கிக் கட்டிக்கொண்டு கிட்டத்தட்ட 10 கிலோ மீட்டர் தூரம் தண்டவாள ஓரமாக உடலிலிருந்து ரத்தம் சொட்ட சுனில் இரண்டு மணி நேரம் நடந்து சென்றார்.
ஹசன்பர்தி ரயில் நிலையம் வந்த பிறகு அங்கிருந்த ரயில் நிலைய அதிகாரியிடம் சுனில் தகவல் தெரிவிக்க அவர் உடனடியாக அதிகாரிகளிடம் தெரியப்படுத்தி ஆம்புலன்சை அழைத்தார்.
பின்னர் ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்ட சுனில் தெலுங்கானாவின் வாராங்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு சுனிலுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. வயிறு, குடல் மட்டுமில்லாது தண்டுவடம், கை, கால் மூட்டு
களிலும் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது.
பின்னர் சுனிலுக்கு சுயநினைவு திரும்பியவுடன் அவரது சகோதரர் பிரவீனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. செய்தி அறிந்து பிரவீனும் அவரது உறவினர்களும் மருத்துவ
மனைக்கு வந்தனர்.
சுனிலின் உடல்நிலை ஆபத்தான கட்டத்தைவிட்டு இன்னும் தாண்டவில்லை என்றாலும் தற்போது அது நிலையாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சுனில் மது போதையினால் கீழே விழுந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்ட நிலையில், விபத்து நிகழ்ந்த அன்று அவர் மது அருந்தவில்லை என்பது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

