எடியூரப்பா: உத்தரவுக்காகக் காத்திருக்கிறேன்

எடியூரப்பா: உத்தரவுக்காகக் காத்திருக்கிறேன்

2 mins read
b29a635f-8a9f-4e0c-a980-ae13107184ad
கர்நாடகாவில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆட்சி கவிழ்ந்துவிட்ட நிலையில், முதலமைச்சராகப் பதவியேற்க தலைமையின் உத்தரவுக்காக காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா. -

பெங்களூரு: கர்நாடகாவில் அடுத்ததாக என்ன செய்யவேண்டும் என்பதன் தொடர்பில் பாஜக மேலிடத்தில் இருந்து வரும் கட்டளைக்காகக் காத்திருப்பதாகவும் உத்தரவு வந்த உடனேயே பாஜக ஆட்சியை மாநிலத்தில் ஏற்படுத்தப் போவதாகவும் நேற்று எடியூரப்பா தெரிவித்தார்.

கர்நாடகாவில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆட்சி கவிழ்ந்துவிட்ட நிலையில், 105 உறுப்பினர்களுடன் பாஜக ஆட்சி அமைக்க முயன்று வருகிறது.

இந்தச் சூழலில் கர்நாடக பாஜக தலைவரான எடியூரப்பாவை நேற்று சட்டசபைக் கட்சித் தலைவராக எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுக்க இருந்தனர்.

அதனையடுத்து நான்காவது தடவையாக முதல்வராகும் வாய்ப்பு எடியூரப்பாவுக்கு கிட்டியுள்ளது. கர்நாடகாவின் இப்போதைய அரசியல் நிலவரங்களை வைத்து பாஜக பல கணக்குகளைப் போட்டு வருவதாக புதுடெல்லி தகவல்கள் கூறின.

கர்நாடகாவில் பதவி விலகிய 16 எம்எல்ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டு 16 தொகுதிகளுக்கும் இன்னும் ஆறு மாதங்களில் இடைத்தேர்தல் நடக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

இப்போது எடியூரப்பா தலைமையில் 105 எம்எல்ஏக்களுடன் பாஜக ஆட்சியை ஏற்படுத்தி பிறகு இடைத்தேர்தலைச் சந்தித்து அதில் 10 இடங்களில் எப்படியும் வெற்றி பெற்றுவிடலாம் என்று மேலிடம் கணக்குப் போடுகிறது.

மாநிலத்தில் அதிபர் ஆட்சியைக் கொண்டு வந்து பொதுத் தேர்தலை நடத்திவிடலாம் என்று பாஜகவில் ஒரு தரப்பினர் கருதுவதாகவும் கூறப்படுகிறது.

இருந்தாலும் 105 பேருடன் பாஜக ஆட்சியை எடியூரப்பா தலைமையில் இப்போது அமைப்பதையே கட்சியின் தேசிய தலைவரான அமித் ஷா விரும்புவார் என்று பரவலாகக் கூறப்படுகிறது. அதனையடுத்து எடியூரப்பா இன்று முதல்வர் பொறுப்பு ஏற்கக்கூடும் என்று நேற்று பரவலாக தகவல்கள் வெளியாயின.

இதனிடையே, எப்படி இருந்தாலும் கர்நாடகாவில் எடியூரப்பா ஆட்சி நீண்டகாலத்திற்கு நிலைக்காது என்று தற்காலிக முதல்வர் குமாரசாமி ஆரூடம் கூறி இருக்கிறார். காங்கிரஸ் விருப்பப்பட்டால் அக்கட்சி உடனான கூட்டணி தொடரும் என்றும் குமாரசாமி ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

இவ்வேளையில், கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சியை எதிர்த்து வாக்களித்த பகுஜன் சமாஜ் எம்எல்ஏவை அந்தக் கட்சியின் தேசிய தலைவியான மாயாவதி உடனடியாகக் கட்சியைவிட்டு நீக்கிவிட்டார்.