'காஷ்மீர் விவகாரத்தில் நடுவருக்கு வேலையில்லை'

'காஷ்மீர் விவகாரத்தில் நடுவருக்கு வேலையில்லை'

2 mins read

புதுடெல்லி: காஷ்மீர் விவகாரம் தொடர்பில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபருடன் கலந்து பேசியதாகக் கூறப்படுவதை தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று திட்டவட்டமாக மறுத்தார்.

காஷ்மீர் விவகாரத்தில் நடுவர் பணிக்கே வேலை இல்லை என்றார் அவர். அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் பிரதமர் மோடியும் சந்தித்தபோது காஷ்மீர் விவகாரம் பற்றி விவாதிக்கப்படவில்லை என்று வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்ஷங்கர் விளக்கம் அளித்து இருப்பதை நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டிய தற்காப்பு அமைச்சர், காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது தரப்பு சமரசப் பணி ஏற்பது என்பது சிம்லா உடன்பாட்டிற்கு எதிரானது என்றார்.

இருந்தாலும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றத்தைவிட்டு நேற்று வெளிநடப்பு செய்தனர்.

காஷ்மீர் விவகாரத்தில் சமரசம் செய்யும்படி அமெரிக்க அதிபரை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதாக வெளியான தகவல் பற்றி விளக்கம் அளிக்கும்படி காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தது.

பிரதமர் மோடி காஷ்மீர் விவகாரத்தில் நடுவர் பணி ஏற்கும்படி தம்மை கேட்டுக்கொண்டார் என்று திங்கட்கிழமை அமெரிக்க அதிபர் தெரிவித்து இருந்தார். இதனை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் வரவேற்று இருந்தார்.

அமெரிக்க அதிபரின் இந்தப் பேச்சு இந்திய நாடாளுமன்றத்தில் பெரும் புயலைக் கிளப்பியது.

இந்த நிலையில், விளக்கம் அளித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர், காஷ்மீர் பிரச்சினை என்பது இரு தரப்பு பிரச்சினை என்றும் இந்தியாவும் பாகிஸ்தானும் அந்த விவகாரம் தொடர்பில் பேச்சு நடத்துவதை அதிபர் டிரம்ப் நிர்வாகம் வரவேற்கிறது என்றும் இதில் உதவ அமெரிக்கா தயார் என்றும் விளக்கம் அளித்தார்.

அமெரிக்க அதிபர் தெரிவித்த கருத்துக்காக அமெரிக்க ஜனநாயக் கட்சியைச் சேர்ந்த பிராட் ஷெர்மான் என்ற நாடாளுமன்ற உறுப்பினர், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஷரிங்லாவிடம் மன்னிப்புக் கேட்டதாக தெரிகிறது.