உடனடி 'முத்தலாக்'கைத் தடை செய்யும் மசோதா; இன்று விவாதம்

உடனடி 'முத்தலாக்'கைத் தடை செய்யும் மசோதா; இன்று விவாதம்

2 mins read
938891c9-9fac-4aee-951c-25d26b8ee8e9
இந்திய நாடாளுமன்றக் கட்டடம். படம்: ராய்ட்டர்ஸ்) -

உடனடி முத்தலாக் சட்டத்தைத் தடை செய்யும் மசோதா இந்திய நாடாளுமன்றத்தில் இன்று விவாதிக்கப்படவுள்ளது. முஸ்லிம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இந்த மசோதா தொடங்கப்பட்டதாக பாரதிய ஜனதா தலைமையிலான அரசாங்கம் கூறினாலும் அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள தண்டனை மிகவும் கடுமையாக இருப்பதாக அதனை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர்.

இதன் தொடர்பான நாடாளுமன்ற வாக்களிப்பில் பங்குபெற பாஜக தனது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கொறடாவை வெளியிட்டுள்ளது.

கீழவையில் மசோதாவுக்குத் தடங்கல் இன்றி ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும் மாநிலங்கள் அவையில் அது சில பிரச்சினைகளை எதிர்நோக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால் உடனடி முத்தலாக் வாயிலாகத் தனது மனைவியை விவாகரத்து செய்யும் முஸ்லிம் ஆடவருக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். குடிமை விவகாரமான விவாகரத்துடன் குற்றவியல் தண்டனைக்குரிய அம்சங்களைப் புகுத்துவது சரியல்ல என்பதும் இதனால் முஸ்லிம் ஆண்கள் பாதிக்கப்படுவர் என்பதும் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சியினரின் விவாதம். பாஜகவுக்கு ஆதரவான ஐக்கிய ஜனதா தளக் கட்சியும் இந்த மசோதாவை எதிர்ப்பதாக அதன் தலைவர் நித்திஷ் குமார் தெரிவித்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் முதல் பதவிக்காலத்தில் நாடாளுமன்றம் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருந்தபோதும் மக்களவைில் அது நிலுவையில் நின்றது.

உடனடி முத்தலாக் முறையை பாகிஸ்தான் 1956ஆம் ஆண்டில் தடை செய்தது. எகிப்தில் அது 1929ஆம் ஆண்டில் சட்டப்படி தடை செய்யப்பட்டது. துனிசியா, இலங்கை, பங்ளாதேஷ், துருக்கி, இந்தோனீசியா, ஈராக் உள்ளிட்ட பல நாடுகளில் இந்த முத்தலாக் முறை தடை செய்யப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்