பாட்னா: இந்தியாவில் பீகார், ஜார்கண்ட், உத்திரப்பிரதேச மாநிலங்களில் ஒரே நாளில் மின்னல் தாக்கியதில் 73 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். பீகாரில் மட்டும் 39 பேர் பலியாகிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மாநிலங்களிலும் அசாமிலும் இடைவிடாது பேய்மழை பெய்து வருகிறது.
இந்த நிலை தொடரும் என்றும் வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்து உள்ளது. ஆகையால் மரண எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பீகாரில் மழைக்கு 123 பேர் பலியாகி இருக்கிறார்கள். 81 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஏராளமான நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல அசாம் மாநிலமும் வெள்ளத்தால் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அசாமில் மழைக்கு 69 பேர் பலியாகி இருக்கிறார்கள். 204 கால்நடைகள் மடிந்துவிட்டன. ஏராள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

