புதுடெல்லி: இந்தியாவில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களில் பயணிகளை அவர்களின் முகத்தைப் பார்த்து அடையாளம் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் தொடங்கப்பட்டு இருக்கிறது.
போலிஸ் நிலையங்களிலும் அத்தகைய தொழில்நுட்பத்தை நடப்புக்கு கொண்டு வர திட்டங்கள் இருக்கின்றன.
இருந்தாலும் இந்தப் புதிய தொழில்நுட்பம் மூலம் ஏற்படக்கூடிய பலன்கள் தெளிவாகத் தெரியவில்லை என்றும் தனிநபர் உரிமைகள் பாதிக்கப்படக்கூடிய நிலைமை இதனால் ஏற்படும் என்றும் சில தொழில்நுட்ப பகுப்பாய்வாளர்களும் தனிநபர் உரிமை வல்லுநர்களும் கவலை தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்தியாவில் கணினி தகவல் பாதுகாப்புச் சட்டம் என்று எதுவும் இல்லை. மின்னணு கண்காணிப்பு ஏற்பாடும் இல்லை. இந்த நிலையில் இந்தப் புதிய தொழில்நுட்பம் காரணமாக எந்த அளவுக்கு நன்மைகள் ஏற்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று அந்த வல்லுநர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
புதிய தொழில்நுட்பம் நடப்பில் இருப்பதால் பெங்களூரு விமான நிலையத்தில் பாஸ்போர்ட்டை அல்லது விமான அனுமதிச் சீட்டை அல்லது இதர அடையாள பத்திரங்களைப் பயணிகள் அதிகாரிகளிடம் முகப்புகளில் காட்டவேண்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

