கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைக்க பாஜக தயக்கம்

கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைக்க பாஜக தயக்கம்

2 mins read

போபால்: இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் மாநிலங்களில் நெருக்கடிகளை ஏற்படுத்தும் வியூகத்தை அரங்கேற்றி வரும் பாஜக, மத்தியப்பிரதேச மாநிலத்தில் திடீர் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

கர்நாடகத்தை அடுத்து பாஜக தலைமைத்துவம் உத்தரவு பிறப்பித்தால் போதும். மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி ஒரே நாளில் கவிழ்க்கப்படும் என்று அந்த மாநிலத்தின் பாஜக தலைவர் கோபால் பார்கவா தெரிவித்த நிலையில், சட்டமன்றத்தில் பாஜக எம்எல்ஏக்கள் இரண்டு பேர் காங்கிரசின் குற்றவியல் சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்துவிட்டனர்.

இதைக் கண்டு பாஜகவுக்குத் தூக்கிவாரிப்போட்டுவிட்டது. மத்தியப்பிரதேச சட்டமன்றத்தில் மொத்தம் 230 பேர். காங்கிரஸ் கட்சிக்கு 114 இடங்கள் உள்ளன.

பாஜகவுக்கு 108 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். நான்கு சுயேட்சைகள், இரண்டு பகுஜன் சமாஜ்வாடி உறுப்பினர்கள், ஒரு சமாஜ்வாடி எம்எல்ஏ ஆகியோரின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

இந்த நிலையில், பாஜக எம்எல்ஏக்கள் இரண்டு பேர் காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களித்து இருப்பது பாஜக தலைமைத்துவத்துக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தி இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வேளையில், கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைக்க பாஜக தயக்கம் காட்டி வருவதாகவும் அங்கு 16 அதிருப்தி எம்எல்ஏக்களின் பதவி விலகல் கடிதம் மீது சபாநாயகர் தீர்ப்பளிக்கும் வரை காத்திருக்கலாம் என்று முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

என்றாலும் இதில் பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பாவின் வயதும் மேலிடத்துக்குப் பிரச்சினையாக இருப்பதாக பேச்சு அடிபடுகிறது.

அமித் ஷா பாஜகவின் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டதும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் அமைச்சராகவோ அதற்கும் மேற்பட்ட பொறுப்பையோ ஏற்கவேண்டுமானால் அவர்களுக்கு வயது 75க்கும் குறைவாக இருக்கவேண்டும் என்று ஒரு விதியை ஏற்படுத்தினார்.

பாஜக கர்நாடகத் தலைவராக இருக்கும் எடியூரப்பாவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி 76 வயது தொடங்கிவிட்டது.

இந்த நிலையில், அவரை கர்நாடக முதல்வராக ஆக்குவதற்குப் பதிலாக வயதில் குறைந்த வேறு ஒருவரை முதல்வராக்கலாம் என்று அமித் ஷா யோசித்து வருகிறார்.

ஆனால் எடியூரப்பாவை பகைத்துக்கொண்டால் கர்நாடகாவில் பாஜக இருந்த இடம் தெரியாமல் போய்விடும் என்பதால் இது பற்றியும் அமித் ஷா ஆராய்ந்து வருவதாக வட்டாரங்கள் கூறுகின்றன.

2018 சட்டமன்றத் தேர்தலின் போது முதல்வர் வேட்பாளராக எடியூரப்பா அறிவிக்கப்பட்டார். அப்போது அவருக்கு 75 வயது பூர்த்தியாக வில்லை என்பதைச் சொல்லி அவரையே இப்போது முதல்வராக்கிவிடலாம் என்று அமித் ஷாவுக்கு யோசனை கூறப்படுகிறதாம்.

இக்கட்டான நிலையில் இருக்கும் பாஜக, கர்நாடகாவில் சிறுபான்மை அரசை அமைப்பதற்குப் பதிலாக அங்கு அதிபர் ஆட்சி அமைய வழிவிடலாம் என்று சிந்திப்பதாகவும் நேற்று தெரியவந்தது.