புதுடெல்லி: இந்தியாவில் மின்னிலக்க பாஸ்போர்ட்டுகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் முயற்சிகளைத் தொடங்கிவிட்டதாகவும் முதல் கட்டமாக 22 மில்லியன் மக்களுக்கு அந்த அதிநவீன பாஸ்போர்ட் வழங்கப்படும் என்றும் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அதிநவீன பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய அந்த பாஸ்போர்ட்டுகளில் தகவல் சில்லு பொருத்தப்பட்டு இருக்கும் என்றும் அவர் அறிவித்தார். அந்தச் சில்லுவில் ஒருவரின் தகவல்கள் அனைத்தும் அடங்கி இருக்கும். சில்லு பொருத்தப்பட்ட புதிய பாஸ்போர்ட்டும் இப்போதைய பாஸ்போர்ட்டை போன்றே இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மின்னிலக்க பாஸ்போர்ட்டில் தில்லுமுல்லு செய்யவே முடியாது என்றார் அவர். இதற்கான கொள்முதல்களைச் செய்வதற்கு அரசாங்கம் அங்கீகாரம் அளித்து இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தக் கொள்முதல் நடவடிக்கைகள் வெற்றிகரமாக முடிந்ததும் மின்னிலக்க பாஸ்போர்ட் தயாரிப்பு வேலைகள் தொடங்கிவிடும் என்றார் அவர். இந்தியாவில் மின்னிலக்க பாஸ்போர்ட்டுகளை அறிமுகப்படுத்துவது தொடர்பான செய்திகள் அண்மைய காலமாகவே இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், அந்தச் செய்திகளை உறுதி செய்த அமைச்சர், புதிய அதிநவீன பாதுகாப்புமிக்க பாஸ்போர்ட்டுகள் நடப்பில் வந்ததும் தில்லுமுல்லு, மோசடி வேலைகள் எல்லாம் ஒடுங்கிவிடும். அதோடு புதிய பாஸ்போர்ட்டுகள் புழங்குவதற்கு வசதியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

