ஆதார் அட்டைகளைத் திருத்தி இறந்தோரின் நிலம் விற்பனை

ஆதார் அட்டைகளைத் திருத்தி இறந்தோரின் நிலம் விற்பனை

1 mins read

ராய்காட்: மகாராஷ்டிராவில் ராய்காட் மாவட்ட உளவு போலிசார் மோசடி கும்பல் ஒன்றை முறியடித்து ஏழு பேரை கைது செய்து இருக்கிறார்கள்.

அந்தச் சந்தேகப்பேர்வழிகள், பலருடைய ஆதார் அட்டைகளில் தில்லுமுல்லுகளைச் செய்து இருக்கிறார்கள். மரணம் அடைந்துவிட்ட அல்லது வேறு நாட்டுக்குச் சென்றுவிட்ட மக்களின் பெயரை ஆதார் அட்டைகளில் இடம்பெறச் செய்து அந்த அட்டைகளை வைத்து பான் எனப்படும் நிரந்தர வங்கி கணக்கு எண்ணைப் பெற்று இருக்கிறார்கள்.

அதன்மூலம் வங்கிகளில் கணக்குகளைத் திறந்து மாண்டுவிட்டவர்களின் நிலங்களை விற்று காசாக்கி இருக்கிறார்கள் என்று ராய்காட் நகரின் போலிஸ் அதிகாரி சச்சின் குஞ்சால் தெரிவித்தார்.

ரோஹா என்ற நகரைச் சேர்ந்த ஒருவர் போலிசில் ஒரு துண்டுநிலம் தொடர்பில் புகார் தெரிவித்ததை அடுத்து சதிக் கும்பல் பற்றி தெரியவந்தது.

அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களிடம் இருந்து பல சாதனங்களையும் இயந்திரங்களையும் அதிகாரிகள் கைப்பற்றி இருக்கிறார்கள். ரூ. 10.5 லட்சம் பணமும் சிக்கி இருக்கிறது.

ஆதார் அட்டை சேவை நிலையத்தைச் சேர்ந்த பிரமுகர் ஒருவரின் துணையுடன் இந்தக் கும்பல் மோசடிகளில் ஈடுபட்டு வேறு யாருக்கோ சொந்தமான பல நிலப்பகுதிகளைச் சட்டவிரோதமாக விற்று இருப்பதாகத் தெரிகிறது என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.