மசோதாக்கள் நிறைவேற்றம்: சாடுகிறார் திமுக எம்பி கனிமொழி

மசோதாக்கள் நிறைவேற்றம்: சாடுகிறார் திமுக எம்பி கனிமொழி

1 mins read

சென்னை: எதிர்க்கட்சிகளின் கருத்துகளைக் கேட்காமல் சட்ட மசோதாக்களைப் பெரும்பான்மை பலத்தால் மட்டுமே நிறைவேற்றிவரும் மத்திய அரசு ஒரு மோசமான முன்னுதாரணமாகத் திகழ்வதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சாடினார்.

திமுக மகளிர் அணி நிர்வாகியும் முன்னாள் மேயருமான உமாமகேஸ்வரி, அவரது கணவர் அவர்கள் வீட்டின் பணிப்பெண் மாரி உட்பட மூவர் நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியில் அண்மையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.

அதேபோல் தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல் திமுக செயற்குழு உறுப்பினர் வி.எஸ். கருணாகரன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இவ்விரு சம்பவங்களில் உயிரிழந்த திமுக கட்சி நிர்வாகிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக தூத்துக்குடி தொகுதி உறுப்பினர் கனிமொழி தூத்துக்குடிக்கு நேற்று விமானம் மூலம் சென்றார்.

"நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வரும் சட்ட மசோதாக்கள் மீது எதிர்க்கட்சிகள் கூறும் கருத்துகளைக் கவனத்தில் கொள்ளாமலும் நிலைக்குழுவுக்கு அனுப்பாமலும் நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பாஜக செயல்படுகிறது," என்று செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி தெரிவித்தார்.

"எதிர்க்கட்சிகள் இதைக் கண்டித்த பிறகும் அவர்கள் எந்தவிதக் கருத்து கேட்கும் கூட்டத்தையும் நடத்தாமல் தனக்கு இருக்கக்கூடிய பெரும்பான்மையான பலத்தைக் கொண்டு சாதித்துவிட வேண்டும் என்று செயல்படுகிறார்கள். இது ஒரு மோசமான முன்னுதாரணம்," என்று அவர் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் விரைவில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி உதயமாகும் என்றும் அப்போது தண்ணீர் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என்றும் கனிமொழி தெரிவித்தார்.