ராமநாதபுரம்: நான்கு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டு பிள்ளைகளையும் பெற்றெடுத்து வாழ்ந்து வந்த ஒருவர் கடைசியாக முதல் மனைவி புகார் தெரிவித்ததை அடுத்து வசமாகச் சிக்கினார்.
கங்காதரன் என்ற அந்த ஆடவர், மேலும் யாரையாவது ஏமாற்றி இருக்கிறாரா என்பதைக் கண்டறிய இப்போது போலிஸ் விசாரணை நடந்து வருகிறது. போலிஸ் புகாரில் கங்காதரனின் முதல் மனைவியான கோமளாதேவி என்பவர் தெரிவித்துள்ள விவரங்களை போலிஸ் அதிகாரிகள் வெளியிட்டு உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கங்காதரன், 2008ல் அதே மாவட்டத்தைச் சேர்ந்த கோமளாதேவியை மணம் புரிந்தார். இருவருக்கும் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.
கோமளாதேவியைக் கரம் பிடித்த பிறகு துபாய்க்கு வேலைக்குச் சென்ற கங்காதரன், அங்கு ஒரு நிறுவனத்தை ஏற்படுத்தி, ஆட்களை துபாய்க்கு வரவழைக்கும் சேவையைத் தொடங்கினார்.
தன் மனைவியையும் துபாய்க்கு அவர் அழைத்துச் சென்றார். அங்கு சில பெண்களுடன் கங்காதரன் ரகசிய பேச்சு நடத்தியதை கோமளாதேவி தெரிந்துகொண்டதை அடுத்து அவரை ராமநாதபுரம் கொண்டுவந்து விட்டுவிட்டு மீண்டும் கங்காதரன் துபாய் போனார்.
ஒரு தடவை ஊருக்கு கங்காதரன் வந்திருந்தபோது நள்ளிரவில் அவரை தொலைபேசியில் யாரோ தொடர்புகொண்டனர். சந்தேகம் அடைந்த கோமளாதேவி, அந்த எண்ணில் தொடர்புகொண்டபோது அவருடன் ஒரு பெண் பேசினார்.
தான் கங்காதரனின் மனைவி என்றும் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் அந்த மாது கூறியதைக் கேட்டு திடுக்கிட்ட கோமளாதேவிக்கு, தன் கணவர் மேலும் இரண்டு பெண்களைத் திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தி வந்த கதையும் தெரியவந்தது.
உடனடியாக அவர் புகைப்படங்களுடன் போலிசிடம் அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்தார். கங்காதரன் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த கவிதா என்ற பெண்ணையும் சென்னையைச் சேர்ந்த யமுனா என்ற பெண்ணையும் திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்று இருக்கிறார்.
இந்நிலையில், தன்னுடைய முதல் மனைவியிடம் வந்து அவருடன் கடலுக்குச் சென்று கடலில் இறங்கி தான் திருந்திவிட்டதாகக் கூறி சத்தியம் செய்து சொத்துகளைத் தன் பெயருக்கு கங்காதரன் மாற்றிக்கொண்டுவிட்டார்.
ஆனால் அவர் திருந்தாமல் பழையபடி தன் வேலையைக் காட்டினார். அண்மையில் சென்னையைச் சேர்ந்த தீபா என்ற பெண்ணை நான்காவதாக கங்காதரன் திருமணம் செய்துகொண்டு பெண் குழந்தையைப் பெற்று இருக்கிறார் என்பதும் தெரியவந்தது.
கோமளாதேவியின் புகாரை அடுத்து கங்காதரன் கைதானார். புகாரில் கோமளாதேவி தெரிவித்தவை உண்மை என்பது தெரியவந்தது. கங்காதரனிடம் விசாரணை நடக்கிறது.

