இந்தியர்கள் அனைவரையும் விடுவிக்க ஈரானிடம் இந்தியா கோரிக்கை

இந்தியர்கள் அனைவரையும் விடுவிக்க ஈரானிடம் இந்தியா கோரிக்கை

1 mins read

புதுடெல்லி: ஈரான் கடற்படையால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பனாமா நாட்டு கப்பலில் பணியாற்றும் இந்திய ஊழியர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என அந்நாட்டு அரசுக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார், ஏற்கெனவே 9 இந்திய ஊழியர்களை ஈரான் விடுவித்துள்ளதாகவும், அவர்கள் விரைவில் இந்தியா வந்தடைவார்கள் என்றும் தெரிவித்தார்.

அதே கப்பலில் பணியாற்றும் மீதமுள்ள இந்திய ஊழியர்களையும் விடுவிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஈரானுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையேயான மோதல் வலுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி பனாமா நாட்டுக் கொடியுடன் ஈரான் கடற்பகுதி வழியே சென்ற கப்பலை எரிபொருள் கடத்தியதாக குற்றம்சாட்டி பறிமுதல் செய்துள்ளது ஈரான்.

அக்கப்பலில் இருந்த 12 இந்திய ஊழியர்கள் தடுத்து வைக்கப்பட்டனர். அவர்களில் 9 பேரை மட்டுமே ஈரான் விடுவித்துள்ளது. மீதமுள்ள மூவரையும் தடுத்து வைக்கப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

அவர்களையும் விடுவிப்பதற்கான முயற்சியை ஈரானில் உள்ள இந்திய தூதரகம் மேற்கொண்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே ஈரான் கடற்படை மற்றொரு கப்பலையும் பறிமுதல் செய்துள்ளது.