புதுடெல்லி: எதிர்ப்புகள் கிளம்பிய போதும், விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் முடிவில் இருந்து மத்திய அரசு பின்வாங்குவதாக இல்லை. இதையடுத்து, அடுத்த கட்டமாக 25 விமான நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நேற்று முன்தினம் இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவர் குரு பிரசாத் மொகபத்ரா இத்தகவலை வெளியிட்டார்.
புதுடெல்லியில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், ஆண்டுக்கு 10 முதல் 15 லட்சம் பயணிகள் வரை வந்து செல்லக்கூடிய விமான நிலையங்களைப் பராமரிக்கும் பொறுப்பை தனியார்மயமாக்குவது என மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
முதற்கட்டமாக ஆறு விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் கட்டமாக 20 முதல் 25 விமான நிலையங்களை தனியார்மயமாக்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம், கௌஹாத்தி ஆகிய ஆறு விமான நிலையங்களை தனியார் மயமாக்குவது என மத்திய அரசு ஏற்கெனவே முடிவு எடுத்துள்ளது. இவற்றுள் மூன்று விமான நிலையங்களை பராமரிக்கும் ஒப்பந்தம் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியதையடுத்து, மீதமுள்ள 3 விமான நிலையங்களைப் பராமரிக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டிருக்கிறது.
விமான நிலைய பராமரிப்பு ஒப்பந்தத்தைப் பெறும் தனியார் நிறுவனங்கள் 40% பணியாட்களை நியமித்துக் கொள்ளும், 60% பணியாட்கள் இந்திய விமான நிலைய ஆணையத்தால் நியமிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

