தீவிரவாதிகள் மூலமாக பாகிஸ்தான் மறைமுக போரில் ஈடுபடுவதாக ராஜ்நாத் குற்றச்சாட்டு

தீவிரவாதிகள் மூலமாக பாகிஸ்தான் மறைமுக போரில் ஈடுபடுவதாக ராஜ்நாத் குற்றச்சாட்டு

1 mins read

புதுடெல்லி: இந்திய எல்லைக்குள் ஊடுருவினால் என்ன நடக்கும் என்பதை கார்கில் போர் உலக நாடுகளுக்கு உணர்த்தி இருப்பதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ராணுவ வீரர்களின் தீரத்தாலும் தியாகத்தாலும் கார்கிலை இந்தியா மீண்டும் கைப்பற்றியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானுடன் கடந்த 1999ஆம் ஆண்டு நடந்த கார்கில் போரின் 20ஆவது ஆண்டு வெற்றி தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.

இதையடுத்து அப்போரில் உயிர்த்தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களுக்கு நேற்று முன்தினம் மக்களவையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதையடுத்து பேசிய ராஜ்நாத் சிங், கார்கில் போர் மூலமாக பாகிஸ்தானுக்கு இந்தியா சரியான பாடத்தை கற்பித்திருப்பதாகக் கூறினார்.

"இதனை சாத்தியமாக்கிய இந்திய ராணுவ வீரர்களுக்கு தலை வணங்குகிறேன். பாகிஸ்தானால் இனி இந்தியாவுடன் முழுமையான போரிலோ அல்லது நேரடிப் போரிலோ ஈடுபட முடியாது. அதனால்தான், தீவிரவாதிகள் மூலமாக மறைமுக போரில் அந்நாடு ஈடுபட்டு வருகிறது," என்றார் ராஜ்நாத் சிங்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே மூண்ட கார்கில் போர் 3 மாதங்கள் நீடித்தது. இதில் சுமார் 500 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இதற்கிடையே எல்லைப் பகுதி யில் மீண்டும் ஊடுருவினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என இந்திய ராணுவத் தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.