மருத்துவர்கள் மீதான வன்முறைச் சம்பவங்களில் தொடர்பு உள்ளவர்களுக்கு 10 ஆண்டு சிறை: வருகிறது புதுச் சட்டம்

மருத்துவர்கள் மீதான வன்முறைச் சம்பவங்களில் தொடர்பு உள்ளவர்களுக்கு 10 ஆண்டு சிறை: வருகிறது புதுச் சட்டம்

2 mins read

புதுடெல்லி: இனி பணியில் உள்ள மருத்துவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவோர்க்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கும் வகையில் புதிய சட்டத்தை கொண்டு வர உள்ளது மத்திய அரசு. இது தொடர்பான வரைவு மசோதாவை அமைச்சரவைக் குழு ஒன்று தயாரித்துள்ளதாகவும், அது மத்திய சுகாதாரத் துறையின் பரிசீலனையில் இருப்பதாகவும் ஊடகச் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

"இந்திய குற்றவியல் விதிகளுடன் தொடர்புடைய வகையில், நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான நடைமுறையின் கீழ் செயல்படுத்தக் கூடிய வகையில் இந்த வரைவுச் சட்டம் உருவாகி உள்ளது.

"வன்முறையின் தன்மை, அதனால் ஏற்படக்கூடிய காயங்கள், பொருள் சேதங்களின் அடிப்படையில் தண்டனை வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது," என்று சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்ததாக ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் புதிய சட்டத்தின் கீழ் மருத்துவமனைகளும் கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது. குற்றம்சாட்டப்பட்டவரால் ஏற்பட்ட சேதங்களை ஈடுகட்டும் வகையில் அவரிடம் இருந்து இரட்டிப்புத் தொகை அபராதமாகப் பெறப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இதே போன்றதொரு சட்டம் நாட்டின் 21 மாநிலங்களில் அமலில் உள்ள போதிலும் அவை அனைத்தும் ஒரே மாதிரியாக இல்லை என்பதால் நாடு முழுவதும் அச்சட்டத்தை அமல்படுத்த முடியவில்லை என்று நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

மருத்துவர்களுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறிய போதும், இத்தகைய தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், இதுவரை ஒரு குற்றச்சாட்டு கூட முறையாகப் பதிவாகவில்லை என மருத்துவர்கள் தரப்பு சுட்டிக் காட்டுகிறது.

"எனவே மாநில அளவில் உள்ள சட்டங்களையும் மீறி ஒருங்கிணைந்த சட்டம் ஒன்றை நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்," என்கிறார் இந்திய மருத்துவ சங்கத்தின் பொதுச் செயலர் ஆர்.வி.அசோகன்.

நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களில் 75 விழுக்காட்டினரேனும் ஏதேனும் ஒரு வகையிலான வன்முறையை எதிர்கொள்வதாக இந்திய மருத்துவச்சங்கம் கவலை தெரிவித்துள்ளது.