பெங்களூரு: கர்நாடகாவில் 14 எம்எல்ஏக்களைத் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டிருப்பது அம்மாநில அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அங்கு புதிதாகப் பதவி ஏற்றுள்ள முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
கர்நாடகாவில் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த 14 எம்ஏல்ஏக்கள் அண்மையில் திடீரென பதவி விலகினர். இதையடுத்து ஏற்பட்ட பல்வேறு அதிரடி திருப்பங்களின் முடிவில் அங்கு முதல்வர் குமாரசாமி தலைமையில் அமைந்த ஆட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றுக் கவிழ்ந்தது.
இதையடுத்து எடியூரப்பா தலைமையில் பாஜக புதிய ஆட்சியை அமைத்துள்ளது. இந்நிலையில் பெங்களூரில் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக சட்டப் பேரவை சபாநாயகர் ரமேஷ்குமார் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 11 பேர் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் மூவர் என மொத்தம் 14 பேரை தகுநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதன்மூலம் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
"அந்த 17 பேரும் 2023 மே 15ஆம் தேதி வரை தேர்தலில் போட்டியிட இயலாது. சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புடன் நிதி மசோதாவை நிறைவேற்ற வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது," என்றார் சபாநாயகர் ரமேஷ்குமார்.
அவரது நடவடிக்கையால் கர்நாடக அரசியல் களத்தில் மீண்டும் சலசலப்பு எழுந்துள்ளது.
இதற்கிடையே ஆட்சியைப் பறிகொடுத்தது குறித்து தாம் கவலைப்படவில்லை என்றும், தமது கட்சியைப் பலப்படுத்தும் பணியில் ஈடுபடப் போவதாகவும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசியத் தலைவர் தேவகவுடா தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வராகப் பதவியேற்ற பிறகு தனது மகன் குமாரசாமி பல்வேறு இன்னல்களை அனுபவித்ததாகக் குறிப்பிட்டார்.
"எங்கள் கட்சியை யாராலும் அழிக்க முடியாது. கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் அதுபற்றி எனக்கு கவலையில்லை. கட்சியைக் காப்பாற்ற வேண்டுமென்பதே என் நோக்கம்," என்றார் முன்னாள் பிரதமருமான தேவகவுடா.

