சண்டிகர்: இரண்டு வாழைப்பழங்களுக்கு பொருள், சேவை வரியுடன் 442 ரூபாய் வசூலித்த 5 நட்சத்திர தங்கு விடுதிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அத்தங்கு விடுதி நிர்வாகம் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தவேண்டும் என கலால், ஆயத்தீர்வை பிரிவு உத்தரவிட்டுள்ளது.
பிரபல இந்தி நடிகர் ராகுல் போஸ் அண்மையில் சண்டிகரில் உள்ள 5 நட்சத்திர தங்கு விடுதியில் தங்கியுள்ளார்.
அச்சமயம் உடற்பயிற்சிக் கூடத்தில் இருந்தபடி பழங்கள் எடுத்து வருமாறு விடுதி ஊழியரிடம் கேட்டுள்ளார்.
இதையடுத்து 2 வாழைப்பழங்கள் கொண்டு வரப்பட்டதாகவும் அதற்கான கட்டண விவரங்களைப் பார்த்து தாம் அதிர்ச்சி அடைந்ததாகவும் ராகுல் தெரிவித்துள்ளார். அவ்விரு வாழைப்பழங்களுக்காக விடுதி நிர்வாகம் பொருள் சேவை வரியுடன் ரூ.442.50 கட்டணம் என குறிப்பிட்டிருந்தது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட அரசு நிர்வாகத்திடம் ராகுல் போஸ் புகார் அளித்தார். இதையடுத்து அந்தத் தங்கு விடுதிக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. முன்னதாக இந்த விவகாரம் தொடர்பில் விளக்கம் அளிக்க தங்கு விடுதி தரப்பில் கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டது.
எனினும் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து விடுதி நிர்வாகத்துக்கு அபராதம் விதிக்கப் பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே தங்கு விடுதியில் தமக்கு அளிக்கப்பட்ட ரசீதை சமூக வலைத்தளங்களில் ராகுல் பகிர்ந்துள்ளார்.
"பழங்களால் தீங்கில்லை என யார் சொன்னது? நான் சொல்வதை நம்ப வேண்டுமெனில் இந்தப் பதிவைப் பாருங்கள்," என்று சமூக வலைத்தளப் பதிவில் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார் ராகுல் போஸ்.

