சண்டிகர்: தமக்குச் சொந்தமான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார் விஜய் மல்லையா.
கிங் ஃபிஷர் விமான நிறுவன வழக்குடன் சம்பந்தப்பட்ட சொத்துகள் தொடர்பாக மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிதி மோசடி தொடர்பான வழக்குகளை எதிர்கொண்டுள்ள விஜய் மல்லையா மற்றும் அவரது உறவினர்கள் சிலரது சொத்துகளைப் பறிமுதல் செய்யுமாறு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவுக்குத் தடை விதிக்க மும்பை உயர் நீதிமன்றமும் மறுத்துவிட்டது.
இதையடுத்து உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார் விஜய் மல்லையா.
தற்போது பிரிட்டனில் தங்கியிருக்கும் அவர் மீது வங்கியிலிருந்து கடனாகப் பெற்ற 9 ஆயிரம் கோடி ரூபாய் தொகையைத் திருப்பிச் செலுத்தாதது தொடர்பாக அமலாக்கத் துறை வழக்குத் தொடுத்துள்ளது.
அவரை நாடு கடத்த பிரிட்டிஷ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்துள்ளார்.
அதில் அவருக்கு எதிராக தீர்ப்பு வரும் பட்சத்தில் அவர் இந்தியா வுக்கு நாடு கடத்தப்படுவார்.

