பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் பதவி விலகியதை அடுத்து அம்மாநிலத்தில் நிலவி வந்த அரசியல் குழப்பம் தற்காலிக முடிவுக்கு வந்துள்ளதாக அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
நேற்று சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அரசு வெற்றி பெற்றது. இதையடுத்து தாம் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் சபாநாயகர் ரமேஷ் குமார்.
பின்னர் சட்டப்பேரவை செயலரை நேரில் சந்தித்து தமது பதவி விலகல் கடிதத்தை அவர் அளித்தார். விரைவில் புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார் என ஆளும் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக நேற்று காலை சட்டப்பேரவை கூடியதும் தமது தலைமையிலான அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார் எடியூரப்பா. அத்தீர்மானத்தின் மீது காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமைய்யா, முன்னாள் முதல்வர் குமாரசாமி உள்ளிட்டோர் பேசினர்.
இதையடுத்து நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் எடியூரப்பா அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். மேலும் உடனடியாக அவர் பதவி விலகினார்.
இதையடுத்து கடந்த சில நாட்களாக கர்நாடகா அரசியல் களத்தில் நீடித்து வந்த பரபரப்பும் குழப்பமும் தற்காலிக முடிவுக்கு வந்துள்ளது.
இதற்கிடையே பதவி விலகுவதற்கு முன்பு சபாநாயகர் ரமேஷ் குமாரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களும் எதிர்வரும் 2023 வரை தேர்தலில் போட்டியிட முடியாது எனக் கூறப்படுகிறது.
முன்னதாக பேரவையில் பேசிய முன்னாள் முதல்வர் குமாரசாமி, கடந்த 14 மாதங்களாக அரசு நிர்வாகம் முடங்கியதாக எடியூரப்பா அபாண்டமாகப் பழி சுமத்துவதாகக் குறிப்பிட்டார். அதிகாரம் யாருக்கும் நிரந்தரம் அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
சித்தராமைய்யா பேசுகையில், புதிய அரசு பதவிக் காலத்தைப் பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கை தமக்கு இல்லை என்றார்.
இதையடுத்து நிதி மசோதாவை தாக்கல் செய்தார் முதல்வர் எடியூரப்பா.

