புதுடெல்லி: நாடு முழுவதும் தண்ணீர் பிரச்சினை நிலவும் நிலையில், தெற்கு டெல்லியில் தண்ணீருக்காக தினமும் ஒரு போர் நடந்து வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நெப் சாராய் பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் தண்ணீருக்காக அல்லாடுகிறார்கள். இங்குள்ள வீடுகள் அனுமதியின்றி கட்டப்பட்டவையாகும்.
பெரும்பாலான வீடுகளில் குடிநீர் இணைப்பு இல்லை. அந்த இணைப்பு இருந்தாலும் கடந்த இரு மாதங்களாக குழாய் மூலம் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தங்களுக்குக் கிடைக்கவில்லை என பரிதவிப்புடன் சொல்கிறார்கள் குடியிருப்பாளர்கள்.
இப்பகுதியில் நிலத்தடி நீர் ஆண்டுக்கு 10 சென்டிமீட்டர் என்ற அளவுக்கு குறைந்து கொண்டே போகிறது. மிக விரைவில் நிலத்தடி நீரை எடுக்கவே முடியாது போகலாம் என்று நீர்வள நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
இந்நிலையில் இங்குள்ள வீடுகளை மத்திய அரசின் சட்டத்திற்கு ஏற்ப முறைப்படுத்தப் போவதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். ஆனால் இதனால் பிரச்சினை தீர வாய்ப்பில்லை என்று இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

