புதுடெல்லி: கல்விக்கு என உருவாக்கிய தனிச்செயலி (அப்ளிகேஷன்) மூலம் உலகக் கோடீஸ்வரர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார் இந்தியாவைச் சேர்ந்த பைஜு ரவீந்திரன்.
தனது பெயரில் இவர் உருவாக்கிய 'பைஜு ஆப்' தனிச்செயலிக்கு பல்வேறு நாடுகளில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. விவேக கைபேசி, மடிக்கணினி மூலம் இந்தச் செயலியை லட்சக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் பிரபல வால்ட் டிஸ்னி நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளார் ரவீந்திரன். இதன் மூலம் வரும் 2020ஆம் ஆண்டுக்குள் 'பைஜு ஆப்' அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய பிற உலக நாடுகளிலும் நுழையும்.
இந்தியாவின் பொழுதுபோக்குத் துறையில் வால்ட் டிஸ்னி நிறுவனம் எத்தகைய பங்களிப்புகள் அளித்ததோ, அதே போன்று கல்வித் துறையில் தமது பங்களிப்பை அளிக்க விரும்புவதாகச் சொல்கிறார் ரவீந்திரன்.
உலகெங்கும் உள்ள குழந்தைகளுக்கு நன்கு அறிமுகமான கதாபாத்திரங்கள் மூலம் பாடங்களைச் சொல்லித் தரும் இவரது யுக்திக்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

