பெங்களூரு: கர்நாடகாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜி சித்தார்த்தா திடீரென மாயமானதையடுத்து அவரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. அவர் தன் உயிரை மாய்த்துக் கொண்டதாக வெளியான தகவலால் பரபரப்பு நிலவுகிறது.
கர்நாடகா முன்னாள் முதல்வரான எஸ்.எம். கிருஷ்ணாவின் மருமகனான சித்தார்த்தா 'கஃபே காபி டே' நிறுவனத்தின் நிறுவனர் ஆவார்.
இந்தியாவில் மட்டும் இவருக்கு 1,700க்கும் மேற்பட்ட காபி கஃபேக்கள் உள்ளன. மேலும் வெளிநாடுகளிலும் இவர் காபி மையங்களைத் திறந்துள்ளார்.
காபி கொட்டைகளைக் கொள்முதல் செய்யும் நிறுவனத்தை தொடங்கியதன் மூலம் தொழிலதிபராக உருவெடுத்த இவர், பின்னாட்களில் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களிலும் பெரும் முதலீடுகளைச் செய்துள்ளார்.
இவரது நிறுவனங்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். குறிப்பாக கன்னட இளையர்களுக்கு அதிக வாய்ப்புகள் அளித்தவர். கடந்த 2018ஆம் ஆண்டில் இவரது 'கஃபே காபி டே' நிறுவனம் 1,814 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியதாகக் கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு இவர் தொழில் ரீதியில் மேற்கொண்ட நடவடிக்கையால் திடீரென பெரும் கடனாளி ஆனார் என்றும் அதனால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டிருக்கக்கூடும் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்தாண்டு இவரது நிறுவனங்களில் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக வருமான வரித்துறை மேற்கொண்ட சோதனையால் சித்தார்த்தா நெருக்கடிகளை எதிர்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் திங்கட்கிழமை இரவு தனது காரில் நேத்ராவதி நதி வரை சென்ற அவர் திடீரென காரை விட்டு இறங்கி, நடைப்பயிற்சி செல்வதாகக் கூறிச் சென்றுள்ளார். பிறகு அவர் திரும்பவில்லை என கார் ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.
அவர் நேத்ராவதி பாலத்தில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே தமது நிறுவனப் பங்குதாரர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஒரு தொழில் முனை வராக தாம் தோற்றுப் போய்விட்ட தாக சித்தார்த்தா குறிப்பிட்டுள் ளார்.
"நீண்ட காலமாக நான் தொடர்ந்து போராடி வருகிறேன். இனியும் என்னால் அழுத்தங்களை தாங்கிக்கொள்ள முடியாது என்பதால் அனைத்தையும் கைவிடுகிறேன். யாரையும் ஏமாற்ற வேண்டும் அல்லது தவறாக வழிநடத்த வேண்டும் என்பது எனது நோக்கமல்ல," என்றும் சித்தார்த்தா தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது.

