வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினியின் கோரிக்கையை ஏற்று அவரது மகள் திருமண ஏற்பாட்டிற்காக முப்பது நாள் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து கடந்த மாதம் 25ஆம் தேதியிலிருந்து சத்துவாச்சாரி புலவர் நகரில் நளினி தங்கியுள்ளார்.
ஆனால் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் அவர் தினமும் கையெழுத்திட வேண்டும் என்று அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காவல் நிலையத்தில் நளினி புதிய கோரிக்கை மனு ஒன்றைக் கொடுத்து உள்ளார். அதில், தினமும் காவல் நிலையத்திற்குச் சென்று கையெழுத்திடுவது சிரமமாக உள்ளது. எனவே காவல்துறையினர் வீட்டிற்கு வந்து கையெழுத்து பெற்றுச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். மகள் திருமணம் குறித்து பேசுவதற்காக சிறையில் உள்ள கணவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும்," என்று நளினி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே இது குறித்து பேசிய சத்துவாச்சாரி ஆய்வாளர் அழகுராணி, நளினி தனது மனுவை சிறைத்துறையிடம்தான் அளிக்க வேண்டும். ஆனால் அவர் பெறுநர் முகவரியில் மாவட்ட எஸ்.பி. என்று குறிப்பிட்டுள்ளதால் எஸ்.பி.யிடம் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.
இதற்கிடையில் நீதிமன்ற உத்தரவின்படி 15 நாட்களுக்கு ஒருமுறை நளினி, முருகன் சந்தித்து பேசி வருகின்றனர்.
தற்போது ஒருமாத பரோலில் வந்த நளினி வேலூர் சிறையில் உள்ள முருகனை சந்தித்துப் பேச அனுமதி அளித்து வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி முருகேசன் (பொறுப்பு) உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து இம்மாதம் 3ஆம் தேதி வேலூர் சிறையில் உள்ள முருகனை நளினி சந்திக்கிறார்.

